டி.ஏ. சம்பந்த மூர்த்தி ஆச்சாரியார் அவர்களின் தமிழிசைப் பணி – முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்

முன்னுரை

            இருபதாம் நூற்றாண்டில் இசை அரங்குகளில் தமிழ்மொழிப் பாடல்கள் வாழ்ந்த பல இசைக் கலைஞர்களுள் சிலரே தமிழிசைக்கு முக்கியத்துவம் அளித்துவந்தனர்.  அண்ணாமலைச் செட்டியாரால் தமிழிசைச்சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் தமிழகமெங்கும் தமிழிசைப் புரட்சி ஏற்பட்டது. இதன் காரணமாகப் பல தமிழிசைப் பாடல்கள் வெளிவந்தன. இசை அரங்குகளில்த மிழிசை அதிகம் ஒலிக்கத் தொடங்கின. அடுத்து பல இசைவாணர்கள் தமது தமிழ் உணர்வால் தனிப்பட்ட முறையிலும் தமிழிசைக்கு தொண்டாற்றியுள்ளனர். அந்த வகையில் தமிழ் இசை உலகில் டி.ஏசம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் இன்றியமையாதவர். இவர்கள் சிறந்த இசைப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பிறப்பு

            டி.ஏசம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் 24-4-1913 அன்று வேலூரில் பிறந்தார். இவரது தந்தையார் திருநாவுடையார் வேலூர் டி.எம்.அப்பாதுரை ஆச்சாரியார் அவர்கள் சிறந்த இசைக்கலைஞர் ஆவார். திருமுறைகளைப் பண்ணோடு ஓதுவதில் வல்லவர். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இவரது திறமையைப் பாராட்டி திருநாவுடையார் என்றசிறப்பு பட்டத்தை வழங்கினார்கள். அதிகமாகத் தேவார நிகழ்வுகளே இவர்கள் அதிகமாகச் செய்துள்ளார்கள்

            சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவர்கள் தமது தந்தையிடமே இசைப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டார். சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் காட்டிவந்தார். இசைக்கலையில் நல்ல நுட்பமும், தெளிவும் ஞானமும் கொண்டு விளங்கினார்கள். எதையுமே வெளிப்படையாகவும், நகைச்சுவையாகவும் பேசவல்லவராக விளங்கியுள்ளார். ஏராளமான புதிய பல இராகங்களை கண்டுபிடித்துள்ளார். தேவாரம் திருப்புகழ் பாடல்களுக்கு இசையமைத்து சுர தாளக் குறிப்பும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர்கள் இசையமைத்த திருப்புகழ்களில் சிந்துபைரவி இராகத்தில் அமைந்த ’அமுதமூறும் சொல்லாகிய தோகையர்’ மற்றும், சுத்த சாவேரி இராகத்தில் அமைந்த ”அகரமும் ஆகி” என்ற திருப்புகழ்கள் மிகப்பிரபலமாக இன்றுவரை இசை உலகில் பாடப்பட்டு வருகின்றன.

இசைத் தொண்டு

            இவர் இசை இலக்கணமும் நன்கு அறிந்தவர். அக்காலத்தில் நிலவிவந்த இசை இலக்கண முறைகளில் உள்ள பல குறைகளைத் தைரியமாக ஆதாரத்துடன் மேடைகளிலும், நூல்களிலும். கூறிவந்தார். அந்த வகையில் தமிழிசைக்காகப் பெரும் ஆதரவுக் குரல்கொடுத்தவர். அக்காலத்தில் சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவர்களை ”தமிழிசைப் போராளி’ என்றே மக்களால் அழைக்கப்பட்டுள்ளார். சென்னையில் வருடம்தோறும் நடைபெறும் பண்ணாராய்ச்சிமா நாடுகளில் கலந்து கொண்டு வந்துள்ளார். ஒருமுறை பண்ணாராய்ச்சி மாநாட்டில் தமிழிசை ஆய்வாளர் வா.சு. கோமதிசங்கரஐயர் அவர்கள் கொண்டுவந்த கட்டுரையை மாநாட்டில் பேசுவதற்கு அவைத்தலைவர் மறுத்தபோது, சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவர்கள் பார்வையாளர் பகுதியில் இருந்து கோபத்துடன் மேடையேறி கோமதிசங்கர ஐயர் அவர்களைப் பேச அனுமதிக்கும்படியும், தாம் அதைக் கேட்க விரும்புவதாகவும் கூறியபின், கோமதி சங்கரஐயர் பேச அனுமதிக்கப்பட்டார்.

நூல்கள்

            பல இசைநூல்களைச் சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் முக்கியமானவை அருணகிரிநாதர் அருளிய கந்தர்அனுபூதி நூலில் உள்ள 51 பாடல்களுக்கு 51 இராகங்களில் மெட்டமைத்து சுர தாளக் குறிப்புடன் எழுதிய சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவர்களின் நூலை இலங்கையைச் சேர்ந்த பாலச்சந்திரன் அவர்கள் 1955ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். இதுபோலப் பல தொகுப்புகளைப் பல்வேறு இராகங்களின் தொகுப்பாக இசையமைத்துள்ளார். 1974 ஆம் ஆண்டு “தாளஏரி” என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் தாளக் கணக்குகளில் சிறந்து விளங்கியுள்ளார் என்பதை இந்நூல் மூலம் அறியமுடிகிறது.

            1959ஆம் ஆண்டு இன்னிசைப் பொழில் என்ற நூலை வெளியிட்டுள்ளார். அந்நூலில் 72  மேளக்கர்த்தா இராகங்களைக் குறிப்பிட்டு அவற்றில் இருந்து தோன்றும் சேய் இராகங்கள் ஆகியவற்றை அவற்றின் ஆரோகணம், அவரோகணத்துடன் குறிப்பிட்டுள்ளார்கள்.

            சுருதிகள் 22 அல்ல 24 என்பதே சரி என்று கூறும் சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவற்றிற்கான ஆதாரங்களையும், தமது கொள்கையை ஒத்த கருத்துடைய சமகாலத்து இசைக் கலைஞர்களினது கருத்துக்களையும் ஒப்பிட்டு காட்டுகிறார். விவாதி இராகங்களை மறுக்கும் இவர் அவை 72 மேளக்கர்த்தா அட்டவனைக்காக ஏற்படுத்தப்பட்டவை என்றும், அவற்றை சுபநிகழ்வுகளில் பாடுதல் கூடாது என்றும், தோஷம் ஏற்படும் என்றும் கூறுகிறார்.

            1972 ம் ஆண்டு “கர்த்தா இராகங்கள் எத்தனை? “ என்ற நூலை வெளியிடுகிறார். 32 இல் 72 போகுமா என்ற கேள்வியையும் முதல் பக்கத்தில் வெளியிடுகிறார். இந்நூலில் 72 மேளக்கர்த்தா இராகங்களின் குறைபாடுகளை விளக்கி, ஆபிரஹாம் பண்டிதர் எழுதிய தமிழ்ப்பண்கள் முறையையும் விளக்கி, பழந்தமிழ் பாலைகளின் தோற்றமுறையில் வேறுபட்டது இந்த 72 மேளக்கர்த்தாமுறை என்பதை வீணையின் மெட்டு அமைப்பையும் கொண்டு நிறுவியுள்ளார். 72 மேளக்கர்த்தா முறையை ஆதரித்த அக்காலத்தில் வாழ்ந்த இசைக்கலைஞர்களை தைரியமாக பெயர் குறிப்பிட்டு சாடியுள்ளார்.

பல நூல்களைச் சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவர்கள் வெளியிட்டுள்ளார், அவற்றில்சில

  1. சுருதிபேத இசை விளக்கம்- 1951
  2. இசை வாரிதி – 1956
  3. தமிழிசையின் தொன்மை – 1943
  4. கர்த்தா இராகங்கள் எத்தனை– 1972
  5. தாள ஏரி  -1974
  6. இன்னிசைப் பொழில் -1959
  7. அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதி இசைநூல் (சுர தாளக் குறிப்புடன்) 1955
  8. எளியமுறை இசைப் பயிற்சி நூல்
  9. இராக மாலா
  10. இராகக் கடல்

      ஆகிய நூல்களுடன் இன்னும் பல வெளிவராத நூல்களையும் தமிழிசை உலகிற்கு அளித்துச்சென்றுள்ளார்.

திருவாவடுதுறை இராஜரத்னம் பிள்ளை அவர்களுடன் நெருங்கிய நட்புடன் பழகிவந்துள்ளார். சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவர்களது நூல்களில் வாழ்த்துரைகளில் அவரது இசைப் புலமையைப் பற்றியும், அவர்களது இசை ஆய்வுகள் உண்மையானதும் நுட்பமானதும் அவற்றைத் தமிழ்நாடு பயன்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியிருப்பார்.

சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் இயற்றிய சில புது இராகங்களாவன

      மனோகரம், பாலச்சந்திரன், ஐம்முகன் உமாபரணம், மான் மகன், காழியன், வாரியார், திருநாவுடையார், அக்னி கோபம் ஆகியவற்றுடன் இன்னும் பல இராகங்களைத் தோற்றுவித்துள்ளார்.

      சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவர்கள் ஆபேரி இராகத்தில் இசையமைத்து வெளியிட்ட மந்திரமாவது நீறு என்ற தேவாரத்தின் மெட்டையே பிரபல சினிமாப் பாடலான ’சிங்கார வேலனே தேவா‘ என்ற பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பாக வழக்கு தொடுத்து, போராடியபோதும் அவருக்கான நியாயம் இறுதிவரை கிடைக்கவில்லை. ஆனால் அவர் இசையமைத்து வெளியிட்ட அந்த தேவாரம்தான் இன்றுவரை அந்தச் சம்பவத்திற்குச் சான்றாக உள்ளது.

      திருமுருக கிருபானந்த வாரியாரின் பூரண அன்பைப் பெற்றவர், சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரின் பாடல்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார். த்தம் மூச்சாக நேசித்தார் என்பதற்கு சிறந்த உதாரணம் தாம் ஈன்ற புதல்வருக்கு தக்கேசி என்ற பண்ணின் பெயரையும், தமது புதல்விக்கு இந்தளம் என்ற பண்ணின் பெயரையும் சூட்டி அழகுபார்த்துள்ளார்.

இவர்தம் புதல்வர்

      சம்பந்தமூர்த்தி ஆச்சாரியாரின் புதல்வர் திரு. டி.ஏ.எஸ். தக்கேசி அவர்களும் தமது தந்தையைப் போலவே சிறந்த இசைக்கலைஞர் ஆவார். கிருபானந்த வாரியார் சுவாமிகளின் கதா பிரசங்க மேடைகள் பலவற்றில் இவரது இசையும் ஒலித்துள்ளது. சிறுவயதிலேயே சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று இசைப்பணிகள் ஆற்றியுள்ளார்.

      திருமுறைப் பாடல்கள் பலவற்றிற்கும், இசையமைத்துள்ளார். பல புதிய இராகங்களையும் தோற்றுவித்துள்ளார். தந்தையின் வழியே ஹார்மோனியம் வழியே பல குழந்தைகளுக்கு இசைப்பயிற்சி அளித்துவருகிறார். இதற்காக பிரத்தியோகமாக ஒரு ஹார்மோனியத்தை தாமே உருவாக்கியுள்ளார். இவர்களது இசைப்பணி இன்றுவரை தொடர்கிறது.

      சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் பழமையான தமிழிசை மரபைக் காப்பதற்கு பலவழிகளில் பேருதவி புரிந்துள்ளார்கள், ஹார்மோனியத்தை கமகத்துடன் இசைப் பயிற்சிக்கு பயன்படுத்தும் முறையை மேம்படுத்தியவர். தமது கருத்துகளை துணிந்து கூறுவதில் வல்லவர் பலத்த எதிர்ப்புகள் வந்தபோதிலும் எதற்கும்அஞ்சாமல் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவியவர்.

மறைவு

      எத்தனையோ பட்டங்கள் பெற்றபோதிலும் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அன்புடன் அளித்த பட்டம் ”அசைக்கொணா இசைத்தமிழ் அறிஞர் சம்பந்தன்”  என்பதாகும், அதனையே இறுதிவரை விருப்புடன் பயன்படுத்தி வந்தார். தமிழிசைக்கு தம் வாழ்நாள் தொண்டாற்றிய பெரும் கலைஞன் இவ்வுலகைவிட்டு  21-4-1977 அன்று  மறைந்தார்.

      அவர்களது தமிழிசைப் பணி என்றும் தமிழிசை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

துணைநூல்கள்

  1. நேர்காணால்:  திரு.டி.ஏ.எஸ்.தக்கேசி – சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவர்களின் புதல்வர்.
  2. கர்த்தா இராகங்கள் எத்தனை – டி.ஏ.சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார்.
  3. அருணகிரிநாதர் அருளிய கந்தரநுபூதி – டி.ஏ.சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் இசைநூல் (சுர தாளக் குறிப்புடன்) – டி.ஏ.சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார்
  4. இன்னிசைப் பொழில் – டி.ஏ. சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார்.

ஆசிரியர்
முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்
தமிழிசைக்கலைஞர், சிதம்பரம்

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*