அறிமுகம்
நாட்டுப்புறப் பாடல் என்பது கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒரு வகை இசைப் பாடலே ஆகும். இங்குப் பயிற்சி பெறாத குரல்கள், பாடுவதற்கு ஏற்ற வகையில் நாட்டுப்புறப் பாடல்கள் அமைந்திருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. நாட்டுப்புறப் பாடலினைக் கிராமியப் பாடல் என்றும் சொல்லலாம். எளிமையாக அமைந்திருக்கும் இப்பாடல்கள் கவர்ச்சி இருப்பதையும் நாம் உணர முடிகின்றது. நாட்டுப்புறப் பாடல்கள் வழியாகக் கிராம மக்களின் கற்பனைத் திறனையும் நகைச் சுவையையும் உள்ள உணர்ச்சியையும் நாம் அறிய முடிகின்றது.
சாதாரண மக்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்களானது அவர்களின் சூழல், பரம்பரை காரணமாக தமிழிசையும் கலந்து நாட்டுப்புறப் பாடல் அமைந்திருப்பதையும் காண முடிகின்றது. நாட்டுப்புறப் பாடல்கள் பலவகை உண்டு. அவை பிறப்பிலிருந்து இறப்பு வரை பாடப்படும் பாடல்களில் தமிழிசையின் செல்வாக்கினையும் காண வேண்டிய சூழ்நிலை உள்ளது.
நோக்கங்கள்
• நாட்டுப்புறப் பாடல்களின் வகைகளை அறிந்து கொள்ளுதல்.
• நாட்டுப்புறப் பாடல்களின் மெட்டுக்களின் வகைகளைத் தெரிந்து கொள்ளுதல்.
• நாட்டுப்புறப் பாடல்களின் மெட்டுக்களினூடாகத் தமிழிசையின் செல்வாக்கினைத் தெரிந்து கொள்ளுதல்
கண்டறிதல்கள்
நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் மெட்டுக்களாக ஆனந்தக்களிப்பு, சிந்து, ஓடம் அல்லது கப்பல், லாவணி முதலியவையாகும். சிந்து பலவகைப்படும். காவடிச் சிந்து, வண்டிச் சிந்து, நொண்டிச்சிந்து, வழிநடைச்சிந்து முதலியவை சிந்துக்களாகக் காணப்படுகின்றது.
நாட்டுப்புறப் பாடல்களில் தாளம் சாதாரண நடையில் திஸ்ர நடையில் அநேகமாக சம எடுப்பில் அமைந்திருக்கும். உதாரணமாக,
“அரிசிப் பொதியோடும் வந்தீரோ தம்பி
அரிசிப் பொதியோடும் வந்தீரோ தம்பி”
எனும் மருத்துவிச்சிப் பாடலானது திஸ்ர நடையில் அமைந்திருப்பதைக் காணலாம். இதனைத் தமிழிசைப்பாடல்களில் ஒப்பிடும் போது அழ வள்ளியப்பாவினால் இயற்றப்பட்ட “குருவி ஒன்று மரத்திலே கூடு ஒன்றைக் கட்டியே” எனும் சிறுவர் பாடலும் திஸ்ர நடையில் அமைந்திருப்பதனைக் கூறலாம்.
நாட்டுப்பற பாடல்கள் அதிகமாக ஆனந்தபைரவி, நாதநாமக்ரியை, நீலாம்பரி, புன்னாகவராளி, குறிஞ்சி, நவரோஜ் போன்ற இராகங்களில் இயற்றப்பட்டுள்ளதை நாம் அறிகின்றோம். அத்துடன் தமிழிசையில் செல்வாக்குப் பற்றித் தெரிவிக்கையில் நவரோஜ் பண்ணில் அமைந்துள்ள “கூற்றாயினவாறு விளக்ககலீர்.” என்ற தேவாரத்தினைக் குறிப்பிடலாம்.
நாட்டுப்புறப் பாடல்களினைக் கிராமியப் பாடல்கள், நாடோடி இசை என்ற பெயர்களும் உண்டு.
நாட்டார்கலைகளும், வழிபாடுகளும், சடங்குகளும் மேட்டுக் குடியினரால் புறந்தள்ளபட்டவையாகவே இருந்தன. சமூக அசமத்துவம் அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகள் கலையாக்கங்களிலும் தொடர்புபட்டு நின்றதைக் காணலாம். செவ்வியல் ஆடலும் செவ்வியல் இசையும் உயர் வகுப்பினருக்குரியதாகவும் நாட்டார் கலைகள் அடிமட்டத்தினருக்கும் விளிம்பு நிலையினருக்கும் உரியவையாக நீட்சி கொண்டன. இன்னும் இதனை அழுத்தமாக விளக்குவதானால், கர்நாடக சங்கீத வித்துவான் ஒருவர் தமது கச்சேரியில் நாட்டுப்பாடல் ஒன்றைப் பாடுவது இழிவென்றும், தீட்டு என்றும் கருதும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறு சபா ஜெயராசா எழுதிய நாட்டாரியற் கல்வி என்னும் நூலில் உள்ளமை பற்றி சித்திக்க வேண்டியுள்ளது. எனினும் இப்போது உள்ள சூழ்நிலையில் சர்வதேச ரீதியில் வெகுசன ஊடகங்களின் தாக்கங்கள் காரணமாக நாட்டுப்புறப் பாடல்கள், தமிழிசைப் பாடல்களினையும் பயிற்சி பெற்று யூரியூப் மூலமும் ரிக்டொக் மூலமும் கைத்தொலைபேசி மூலமும் உலாவருவதினை கண்கூடாக காண முடிகின்றது. எனவே நாட்டுப்புறப் பாடல்கள் பாடுபவர்கள் இன்று முறைப்படி கர்நாடக சங்கீத பயிற்சிகளை வெகுசன ஊடகங்கள் மூலம் கற்றுக் கொள்வதைக் காண முடிகின்றது.
தமிழ்ச் சூழலிலே தோற்றம் பெற்ற சித்தர்கள் நாட்டாரியல் தளத்தில் நின்றே தமது பாடல்களைத் தந்தனர். அதே வேளை மேட்டுக்குடியினர் அவர்களது பாடல்களுக்குரிய அங்கீகாரத்தை வழங்காது இருந்தமை ஆழ்ந்து நோக்கப்பட வேண்டியதொன்றாகும். எனினும் இன்று “ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை” எனும் சிவவாக்கியர் பாடலானது இராகத்துடன் பாடப்படுவதைக் காணமுடிகின்றது.
உசாத்துணை நூல்கள்
1. செல்லத்துரை. பி.டி.(2010) – தென்னக இசையியல் – வைகறைப் பதிப்பகம் – திண்டுக்கல் – 624 001
2. சபா. ஜெயராசா. – 2017 – நாட்டாரியற் கல்வி – சேமமடு பதிப்பகம், கொழும்பு – 11
Leave a Reply