பக்தி இலக்கியங்களில் பண்ணிசைச் சிந்தனைகள் – முனைவர் தே. இளங்கோவன்

ஆய்வுச்சுருக்கம்

            இலக்கியங்கள் பல தமிழ்ச் சமுதாயத்திற்கு நற்சிந்தனைகளைத் திரட்டித் தந்ததன் எதிரொலி தமிழர், தமிழன், தமிழர் விளையாட்டுக்கள், தமிழர் கவின்மிகு கலைகள், தமிழன் இலக்கணம் என நம் முன்னோர் மார்தட்டி நின்றனர் அன்று! நாம் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றோம் இன்று! தமிழ் இலக்கியங்களில் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் பயின்ற நல்லெண்ணங்களைத் தவிர பிற இலக்கியங்கள் நம் சிந்தைக்குப் புதிதாய் ஏதும் தருவனவாய் இல்லை. காரணம் பக்தி இலக்கியங்களும், பைந்தமிழ் இலக்கணங்களும் பொதிந்த முத்தமிழ் மூலங்களில் உறைந்த தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றும் ஐம்பெரும் காப்பியங்களில் கிடைத்த சிந்தனைகளை என்னவென்று சொல்வது! ஏதென்று எண்ணுவது! சிலப்பதிகார காலத்தில் இசையை நுட்பமாக ஆராய்ந்த தமிழர்கள், தேவார காலத்தில் பக்தியோடு பாடும் பண் முறைகளைக் காலச் சூழலுக்கு உகந்த பொருத்தத்துடன்பாடி இறைவன் பக்தி செருக்காய்க் கண்முன் காட்சியாகச் சிவனைக் கண்டார். சிவ தரிசனம் பெற்று பண்களுக்கு உரிய பதிகங்களைப் பாடி இறையடி திருவடி நிழல் கண்டனர். நட்டபாடை, புறநீர்மை, காந்தாரப் பஞ்சமம், கொல்லிக் கவ்வாணம், செந்துருத்தி, முல்லைப் பண், பழம் பஞ்சுரம் எனப் பண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிந்தனையைப் பண்ணிசையாய்த் தருவனவற்றுள் சிறந்து விளங்குின்றது. ஆழ்வார்கள் பாசுரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. பக்தி பயனுற பாடிய பன்னிரு ஆழ்வார் பாசுர பக்தியும், திருப்புகழில் சந்த தாளப் பாவலப் பெருமானின் பக்திப் புலமையும் பண்ணிசைக்கு ஆதாரம் என இக்கட்டுரை ஆய்வுக் தலைப்பை ஆராய்வதாக அமைகிறது.

முன்னுரை

            உலக இலக்கியங்களில் தொன்மை வாய்ந்த இலக்கியமாக என்றும் எவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இலக்கியம் முந்து தமிழ் மூத்த தமிழ் தந்த சிந்தனை பேரின்ப இலக்கியங்கள் பக்தி தமிழிலக்கியங்களாகும். பக்தி இலக்கியங்களில் தேனமுத பாசுரமாகத், தேவாமிர்த தேவாரமாகத் தமிழிசையின் தரத்திற்கு உரமிட்ட பண்ணார்ந்த பாடல்கள்வழி பக்தி இலக்கியங்கள் பல இவ்வுலகில் விந்தைகள் புரிந்து பலரது சிந்தையைத் தூண்டியுள்ளன. தேவாரமூவரும், பன்னிரு ஆழ்வார்களும் இலக்கண வளம் செறிந்த பண்ணிசைப் பாடல்களைப் பாடி பக்தி இலக்கியச்சிந்தனைகளுக்கு வனப்பு, வன்மை, யாப்பு, சந்தம் முதலான இசை அணிகள் பலதந்து இன்னிசை இயம்பும் தமிழி சைவவரலாற்றில் முத்திரைப் பதித்துச் சென்றுள்ளனர். பண்ணியல் என்பது இலக்கிய இணைப்புக்கு இன்னமுத இசை இன்பம் தரும் ஓர் இயலிசைக்கூறு ஆகும். பண்வளம் மிக்க பதிகங்கள் கடவுளின் கருணையை அருட்கொடையாக்கி உரு ஒளியைக் காட்சிப்படுத்தும்போது பக்தி மிளிர்கிறது. இசை வழிபாடும், இறை வழிபாடும் பயனுற மக்கள் சங்க இலக்கியங்களில் தங்களை ஆழ்த்தி கருத்தாழமிக்க பக்தி இலக்கியங்களை அடிபணிந்து அதன் மரபைக் காத்துவந்தனர். பண்கள் இல்லாமல் பக்தி இசை வழிபாட, கூட்டு வழிபாடு இல்லை என மாறிய காலம் கடந்து மறுபடியும் பண்ணின்கண் இம்மண்ணின் கண்ணானவர்கள் பேணிய இசைமரபைப் பக்தி இலக்கியங்கள்வழி தற்போது எவ்வாறு காத்து வருகின்றனர் என்பதை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழிசையின் பண்பாடு பண்

            ஐவகை நிலங்கள் அடிப்படையில் பண்கள் பகுத்தறியப்பட்டதைத் தொல்காப்பியம் சற்றுதெளிவாக விளக்குகிறது. ஏனென்றால் முதல் மற்றும் இடைச் சங்கத்தில் இசை நூல்கள் பல அழிந்துபோயினும் கடைச் சங்கநூல்கள் ஒருசில நூல்கள் மக்கள் வழக்கில் அறியப்படும்போது பண் அமைப்பு விளக்கப் பட்டதைத் தொல்காப்பியர்வழி அறியலாம். பண்ணும், பாடலும், பண்பட்டு வளர்ந்ததைப் பஞ்சமரபு மூலம் நன்கு அறியலாம்.

“பாவோ டனதை லிசையென் றார்பண் ணென்றார்”1 (பஞ்ச மரபு)

தொல்காப்பியம்மூலம் பண்ணிசை வளர்ச்சி நன்கு அறியமுடிகிறது.

“அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்

உளவென மொழிப இசையோடு சிவணிய

நரம்பின் மறைய என்மனார் புலவர்”         (தொல்.எழுத்து)

என்கிறது தொல்காப்பியம். பக்தி இலக்கியங்களுக்கு வழிகாட்டிகள் சங்கநூல்களே என்னும் அடிப்படையில் பாடல்கள் வளர்ச்சியும், பக்தியின் நெகிழ்ச்சியும் பழந்தமிழில் வாழ்வில் இரண்டறக் கலந்த இயல்பை எடுத்துக் காட்டுகின்றன. அகத்தெழு வளியிசை நீட்டம், இசையில் அடுகல், ஒழியிசைக் கிளவி, பாட்டுவண்ணம் இவை பாடல்கள் பல புதியனவாக உதிக்க ஏற்றம் தந்த இவை அணிகள் எனலாம். இசையிலக்கணத்திற்கு அடிப்படை இயலிலக்கணத்திலும் உரிய இடத்தே கூறப்பெற்றிருப்பது அறிந்துணரலாம் (தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, 1983).

காலமும், பண்ணும்

            பண்ணிற்காக இலக்கண நியமங்கள் வகுக்கப்படும்போது காலத்திற்கும், பொழுதுக்கும் உகந்த பண்ணைப் பாடும் முறையை முதலில் வகுத்தனர். சைவமரபிலும், வைணவ மரபிலும் துயிலெழுப்புதல், ஊஞ்சல், தாலாட்டு என வழிபாட்டு வைபங்களை இன்றும் காண்கிறோம். சுவாமி புறப்பாட்டிற்கு உகந்த நட்டபாடை பண்ணை அன்றே தமிழர்கள் முறையாகப் பயன்படுத்தியிருப்பது இன்றைய இசை மரபு மற்றும் வாத்ய மரபில் தொடர்ந்து பின்பற்றி வருவது தமிழிசைக்குப்பெருமை சேர்ப்பதாய் அமைந்துள்ளது.

            மல்லாரி உருப்படியில் நாதஸ்வரத்தில் நட்டபாடை பண் வாசிக்கப்படுகிறது. பக்தி இசைவழி பாடிய முழு பண்ணியல் இலக்கணங்கள் இங்கு வடிவம் கொண்டதால் பண்களின் அழகைப் பொறுத்து பாடலின்அழகு மிகையுறுகிறது.

பண்ணிலக்கணம்

            பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பண்ணிலக்கணத்தைத் தெளிவுற எடுத்துக் காட்டுகின்றன.

“பண்ணதிர்ப்பின் பாடல் அதிர்ந்து விடும்” பண் ஒழுங்காகவும், சீராகவும் அமையாவிட்டால் அது “அதிர்ப் பொலி” (அபசுரம்) ஆகிவிடும் என்கிறது. நான்மணிக்கடிகை நூல். பாடலுக்கும், பண்ணுக்கும் உள்ள நெருக்கத்தால் பாவலர் அதன் அதன் பொருள் உணர்ந்து பாடுதல் நலம் என்கிறது (முனைவர்அ.நா. பெருமாள், 1984). மேலும் திரிகடுகம் நூல்வழி பண் அறிவு இல்லாதவர் யாழிசை கேட்டு எந்தப் பயனும் இல்லை என்னும் கூற்றும் பண்ணின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றி நிற்கின்றது என்பதை உணரமுடிகிறது. பிற்காலத்தில் பக்தி இலக்க காலத்தின் இதன் மேம்படுத்தப்பட்ட நிலையைக் காரைக்கால் அம்மையார் வழி அறிகிறோம். சங்கம் மருவிய காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டுவரை செல்கிறது. பல்லவர் காலம், பக்தி இலக்கிய காலம், பண்ணிசையின் மறுமலர்ச்சிக் காலம் எனப்படுகிறது.

            பல்லவர் காலம் பக்திக்குப் பதிபக்தி தந்துதவியதால் தமிழ்மொழி புதுப்பொலிவுடன் இயல் தமிழ் பாக்கள் பண்ணோடு இயைந்து எங்கும் இசை பரப்பின (பேரா. அடைக்கலசாமி, 1968). பண்வளம் பெற்ற தமிழ்நாடு பக்தி அடியார்கள் பலரைப் பண்ணோக்கில் பண்ப புலன் கொண்ட பண்ணியலாளர்களை உறவாக்க வழிவகுத்தது.

பண்ணின்இலக்கணம்

            மனித உடலில் எட்டு பெருந்தானங்களை எட்டு செயற்களால் பிறப்பித்து ஓசைபடுத்தலால்ஏற்படுவதே பண் என்று பஞ்ச மரபு சுட்டுகிறது. ஏழு நரம்புகளை கொண்ட இசைமுறை பண் அல்லது பெரும்பண் என்றழைக்கப்படுகிறது. தற்கால இசை முறையில் மேற்கத்திய அல்லது தாய் ராகங்கள் என்றழைக்கப்படுகின்றது.

            சம்பூர்ண ராகங்கள், ஜனக ராகங்கள் என்பது மறுபெயராகும். இவற்றில் குறைந்த நரம்புகளைத் ‘திறம்’ என்றழைக்கிறார்கள். தற்கால வழக்கில் ஜன்ய ராகம் என்றழைக்கப்படுகிறது. நரம்புகள் என்பது ஸ்வரத்தைக் குறிக்கிறது. திறத்தை வகைப்படுத்தப்படும்போது பண்ணியத்திறம் (6), திறம் (5) திறத்திறம் (4) இவை தற்காலத்தில் ஷாடவம், ஔடவம், ஸ்வராந்திரம் என்று வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் செம்பாலைப் பண், முல்லைப்பண், செந்துருந்தி, நட்டப்பாடை, புறநீர்மை போன்ற பண்கள், கோயில் வழிபாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் திறப் பண்களாகும்.

பக்தி இயக்க காலம்

            காரைக்கால் அம்மையாரே பண்கள் பதினாறுபாட வழிவகுத்தவர் என்பதை அவரின் திருப்பதிகங்கள், திருவந்தாதிவழி அறியலாம். ‘சைவ இலக்கியங்கள் தழைத்தது போல வைணவ பாமாலைகளும் இசை வழிபாட்டுவழி பண் மரபோடு இணைந்து பக்தி இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின. தேவார மூவர்களின் பண்ணார்ந்த பாடல்கள் சைவமரபில் பக்திச் செழுமையைப் பறைசாற்றின. பன்னிரு ஆழ்வார்களின் பாசுரப் பக்தி வைணவ இலக்கியங்கள் வளர்ச்சிக்குச் செறிவு அடிகோலின. எனினும் பிற்காலத்தில் பண்கள் இருவழிபாட்டிலும் சங்ககாலப் பண்களின் மரபைத் தொடர்ச்சியாக வெளியுலகிற்கு ப்ரகாசிக்க செய்ய அடியார்களும், வணைவ மறையோதுவோரும் பெரும்பங்கைத் தமிழிலக்கியபக்தி இலக்கியத்திற்கு அர்பணித்துள்ளனர் என்பதே உண்மை. சாமவேத இசை என்பது சாஸ்த்ரிய இசை வடிவம் ஆகும். தேவார மூவர் பண்மரபில் பாடியபோது ஆழ்வார்களும் பல பண்கள் பாடிய குறிப்புகள் கிடைக்கப்பெறுகிறது. ஏறக்குறைய 4000 பாசுரங்கள் கிடைக்கப் பெற்றன. நாலாயிரத் திவ்ய பிரபந்தத்துள் மூன்றாவது ஆயிரம் இயற்பா ஆகும். எனவே மற்ற மூன்றாயிரம் பாடல்களும் இசையுடன் பாடவேண்டும் என்கிறார் நம்மாழ்வார். இவர் பாசுரங்களில் தேவாரத்தில் காணப்பெறாத சில பண்களைக் காணமுடிகிறது. உதாரணமாக: வியந்தம், அந்தாளி, நாட்டம், குறண்டி, முதிர்ந்த இந்தளம் போன்றவையாகும்.

“பண்ஆர் தமிழ்”

“பால்ஏற் தமிழர் இசைகாரர்”

பத்தர் பரவும் ஆயிரத்தின்”                        (1-ஆம் பத்து)

இதன்மூலம் எழுத்து, அசை, சீர், பந்தம், அடி, தொகை, யாப்பு, பண்ணிசை, தாளம் முதலியவற்றுடன் ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படும்முறை உறுதியாகிறது. (Wayne Howari, 1977) தேவாரத்தில் பல்வேறு இசைக் கருவிகளைத் தேவார மூவர் காட்டியுள்ளதன் மூலம் பக்தி இசை வழிபாட்டிற்குரிய இசைக் கருவிகள் பல உலகிற்கு வெளிச்சமாயின. அதுபோலவே ப்ரபந்தங்களில் பண்ணிசைக் கருவிகள் பல ஆழ்வார்களால் சித்தரித்து காட்டப் பட்டுள்ளதால் பக்தி இலக்கிய இசை மரபிற்கு இவர்கள் பன்னிருவரும் முக்கிய முன்னோடிகள் ஆவர்.

            சம்பந்தர்,

“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல, வீணை தடவி”

என்பார்.

            நம்மாழ்வார்,

“முன்நல்யாழ் பயில்நூல் நரம்பின் முதிர்சுவையே” (2220)

என்பார்.

“யாழிசை அமுதே”

(முனைவர் இ. அங்கயர்கண்ணி & ரா. மாதவி, 2007)

என்ற வரிகளால் வீணையை உவமிப்பர் என்பதன் மூலம் பக்தி மிக்க தேவார அடியார்களும்,  பாநாலாயிரம் தந்த பாசுரக்காரர்களுமே பண்ணிசைச் சிந்தனைகளுக்கு தந்தையர் என்பது புலனாகிறது.

முடிவுரை

            பக்தி இலக்கியங்கள் எவ்வளவு புதிதாய் உதித்தாலும் சிந்தனைமிக்க தமிழரின் தரத்தை இசை மரபோடு தடம் புரளாமல் வழிநடத்திச்சென்ற பாங்கில் சைவமும், வைணவமும் பெரும்பங்கைக் கொண்டுள்ளன. திருப்பள்ளி எழுச்சியில் பூபாளம் பாடப்படுவதும், துயிலுறங்கச் செய்ய சங்க இலக்கியங்களில் பல்துறை சிந்தனைகளை ஆராயுங்கால் நுண்கலைகளால் தமிழர்கள் உலகுக்கு அறிமுகம் தந்து தன்னை நிலைப்படுத்தியுள்ளனர். இவ்வகையில் பண்ணிசைப் பாடல்கள் பக்தி இலக்கியங்களுள் உயர்ந்த இடத்தைப் பெற்ற தன்விளைவாக 14-ஆம் நூற்றாண்டில் திருப்புகழ் இலக்கியம் தோன்றியது. பல்வேறு சந்தத் திருப்புகழ் பாடல்களை உலகிற்கு அருளிய அருணகிரி நாதரின் பக்தி இலக்கியச் சிந்தனைகளை இன்று உலகோர் உற்றறிவதுடன் வாழ்வியல் நெறிமுறைகளை பண்ணறிவுடன், பண்பாட்டுடன் கற்றறிந்தனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மேற்கோள்கள்

  1. அங்கயற் கண்ணி. முனைவர் & முனைவர் மாதவி, (2006). தமிழிசை தொன்மையும் பெருமையும், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
  2. அடைக்கலசாமி. பேரா., (1960). தமிழ் இலக்கிய வரலாறு, ராசிப் பதிப்பகம், சென்னை.
  3. தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு. (1983). தமிழ்நாட்டு வரலாறு, திருமலைப் பதிப்பகம், சென்னை-4.
  4. பெருமாள். அ.நா. முனைவர்., (1984). தமிழர் இசை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  5. WAYNE HOWARD. (1977). Sama Vedic Chaut, New Heaven & London Yale UniversityPress

முனைவர் தே. இளங்கோவன்

உதவிபேராசிரியர், தமிழ்த்துறை

பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

திருவஞ்சேரி, சென்னை –  126   

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*