ஆய்வு நோக்கம்
இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது நம் தாய்மொழி. இயற்றமிழ் கொடுத்த முக்கியத்துவத்தையும் அங்கீகா தமிழ் இலக்கியங்கள் இசைக்குத் தரவில்லை என்பதை ஏற்றாக வேண்டும். இயல் தமிழ் இன்று நவீன இலக்கியங்களாக உருவெடுத்து அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடகக்கலைக்கூட இன்று தொலைக்காட்சித் தொடர்களாகவும் வலையொளித் தொடர்களாகவும் பரிணமித்துள்ளது. ஆனால் பண்டுதொட்டு தமிழிசையும் பண்களும் அயல்மொழிக்கு சொந்தமாகிவிட்டது. தமிழிசையை மீட்டெடுக்கத் தவறிய கலைச்சமூகம் காலப்போக்கில் அடைந்த மாற்றங்களை ஆய்ந்து நோக்குவதே நோக்கமாகும்.
முன்னுரை
இசையும் பாடலுமாக வளரும் இன்றைய திரைப்படக்கலைச் சமூகம், நாடகக்கலையினின்று முன்னேறி வந்துள்ளது. கீர்த்தனைகள், கர்நாடக சங்கீதத்தால் நடத்தப்பட்ட நாடகங்கள், பிற்காலத்தில் திரைப்படங்களாக உருமாறிய நிலையில் தமிழிசையும் அது சார்ந்த பண்களும் தாளங்களும் காணாமல் போகத் தொடங்கின.
திரையிசை வரலாறு
திரைப்படம் முழுவதும் 3.00 மணி நேரம் முதல் 3.45 மணி நேரம் வரை பாடலும் இசையும் ஆரம்ப காலகட்டத் திரைப்படங்களை ஆக்கிரமித்து இருந்தன. பிறகு 6 முதல் 8 வரையிலான பாடல்களை 8 முதல் 10 நிமிடங்கள் என எல்லை வகுத்து படக் காட்சிகளுக்கு இடையே பாடல்களை இசையோடு காட்சிப்படுத்தினர். திரைப்படக் கலையின் மீதான ஆர்வம் மக்களாகிய ரசிகர்களுக்கு அதிகரிக்கும் நிலையில் கிட்டத்தட்ட 1990 காலகட்டத் திரைப்படங்களில் 5 முதல் 6 பாடல்கள் ஐந்து முதல் ஆறு நிமிடங்களாக சுருங்கிவிட்டது. இன்றைய 21ம் நூற்றாண்டு திரைப்படக்கலை, இசைக்கலையை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் இல்லை என்பதே கண்கூடாகப் பார்க்கும் நிலையாக உள்ளது. நம் தமிழிசைக் கலைஞர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகள் எல்லாம் பெயர் கூடத் தெரியாமல் அழிந்துவிட்டது. அல்லது குறிப்பிட்ட இனத்திற்கான சின்னமாக, அடையாளமாக மாறிப்போனது. இத்தகைய வருத்தமளிக்கும் சூழலில் நமது திரைப்பட இசை அமைப்பாளர்கள் மேநாட்டு இசைக்கருவிகளையே பெரிதும் பயன்படுத்தி இசையமைக்கின்றனர்.
‘இசைஞானி’ என்று போற்றப்படும் பிரபலமான தமிழ் இசையமைப்பாளர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா அவர்கள் கூட ‘ஹார்மோனியம்’ என்று அழைக்கப்படும் பிரஞ்ச் நாட்டில் உருவாக்கப்பட்ட இசைக்கருவியைக் கொண்டே தமது இசைப் பயணத்தை தொடங்கியுள்ளார். யாழ்,முழவு போன்ற இசைக்கருவிகளை இன்று நாம் படக் காட்சிகளாய் மட்டுமே பார்க்கும்நிலை உருவாகியுள்ளது.
திரையிசைப்பாடல்களில் இசைக்கருவிகள்
திரையிசைப் பாடல்களில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் ஹார்மோனியம், ட்ரிபிள் ஏங்கோ, ட்ரம், பேங்கோஸ், தும்பா, மிருதங்கம், தமிழ் டேப், பம்பை, உடுக்கை, மோர்சின், கஞ்சிரா என பல இசைக்கருவிகள் திரை இசைக்காக பயன்பாட்டில் உண்டு. அத்தோடு பியானோ, கிட்டார், வயலின், வீணை, தபேலா, கீபோர்டு, ட்ரம்பெட், சாக்ஸஃபோன், புல்லாங்குழல் ஆகியவை இன்றைய திரையிசைப்பாடல்களை இசைப்பதற்காக இசையமைப்பாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. இவற்றுள் ‘குழல்’ என்று சொல்லப்பட்ட பண்டைய கால இசைக் கருவியான புல்லாங்குழல் மட்டுமே இன்றும் திரை இசையில் பயன்படுத்தும் இசைக்கருவியாக உள்ளது. அது இல்லாமல் கிளாரினேட், ட்ரான்ஸ்போர்ட், கடம், நாதஸ்வரம், உறுமி போன்றவையும் தற்காலத்தில் மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நரம்புக்கருவிகள்:
வயலின்:
திரையிசைப் பாடல்களில் மிகவும் பிரபலமான ஒரு கருவி. இது பாடல்களுக்கு உணர்ச்சிகரமான மெட்டுகளை சேர்க்கிறது.
கிடார்:
பாப், ராக் போன்ற இசை வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் கருவி. இது பாடல்களுக்கு ஒரு நவீன தோற்றத்தை தருகிறது.
வீணை:
கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் ஒரு கருவி. இது திரையிசைப் பாடல்களில் ஒரு பாரம்பரிய தோற்றத்தை கொடுக்கிறது.
புல்லாங்குழல்:
மென்மையான இசையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கருவி. இது பாடல் காட்சிகளில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க உதவுகிறது.
கோட்டு வாத்தியம்:
கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் மற்றொரு கருவி.
காற்றுக்கருவிகள்:
புல்லாங்குழல்
அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறது.
டிரம்பட்:
ஒரு பெரிய மற்றும் உரத்த கருவி. இது பாடல்களுக்கு ஒரு உற்சாகமான தோற்றத்தை சேர்க்கிறது.
சாக்ஸபோன்:
ஜாஸ் மற்றும் பாப் இசையில் அதிகமாக பயன்படுத்தப்படும் கருவி.
கிளாரினெட்:
இது ஒரு மென்மையான மற்றும் இனிமையான ஒலியை வெளிப்படுத்தும் கருவி.
தோற்கருவிகள்:
தபேலா: இந்திய இசையில் ஒரு முக்கியமான தாள வாத்தியம். இது பாடல்களுக்கு ஒரு துடிப்பான ஓசையை சேர்க்கிறது.
மிருதங்கம்: கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியம்.
கஞ்சிரா: கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியம்.
டோலக்: ஒரு பெரிய தாள வாத்தியம்.
கீபோர்டு: இது ஒரு மின்னணு கருவி; பல்வேறு வகையான ஒலிகளை உருவாக்க முடியும்.
இசையமைப்பாளர்களின் போக்கு
தொடக்கத்தில் புராண இதிகாசக் கதைகளைப் படமாக்கியபோது திரை இசை நிரம்பியிருந்தது. அதன்பிறகு திராவிடம் துவங்கிய காலகட்டத்தில் பாடலுக்கும் இசைக்கும் தரப்பட்ட முக்கியத்துவம் தேச உணர்ச்சி, தமிழ் உணர்ச்சி என்று வசனத்திற்கு முக்கியத்துவம் தரும் நிலையாக மாறியது. ‘அஹிம்சை தத்துவம், மத ஒற்றுமை, சாதிய ஒழிப்பு போன்றவை இந்தியா முழுவதும் பேசப்பட்டதன் தாக்கம் தமிழ் சினிமாக்களையும் பேசக் கேட்க முடிந்தது’ (பக்.82, முனைவர். கே.ஏ.குணசேகரன், இசை நாடக மரபு). தமிழ் திரைப்படங்களின் கதைமொழிதல் இசைகளின் பிடியில் இருந்து விடுபட்டு வசனங்களுக்குரிய, இலக்கிய மொழிநடை விடுபடாத நிலையுடைய படங்களாய் மாறிப் போனது.
இளையராஜாவின் திரை இசைப்பாடல்கள் தமிழிசைக்கான நாட்டுப்புற பாடலுக்கான இசையாக இருந்தது. 90களில் இளையராஜாவின் காலகட்டத்திலேயே இசைப்பயணத்தைத் துவங்கிய ‘தேனிசைத் தென்றல்’ என்னும் சிறப்பு அடைமொழி உடைய தேவா அவர்கள் ‘கானா’ என்னும் நாட்டுப்புற பாடல் மெட்டினை வளர்த்தெடுத்த பெருமைக்குரியவராக உள்ளார். கானாப் பாடல் என்றாலே நமக்கு அவருடைய நினைவு வருமளவிற்கு தமிழிசைக்கு அவருடைய பங்கு அமைந்துள்ளது.
அதற்கடுத்து ஏ.ஆர். ரகுமானின் திரையிசைப் பாடல்கள் அத்தோடு மேல்நாட்டு இசைப்பாணியில் ரேப், சீம்போனி போன்ற மேற்கத்திய இசை, எலக்ட்ரான், கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி இசை போன்ற பல இசைவடிவங்களை பயன்படுத்தியமை தமிழிசைப் பாணியில் இருந்து விலகியமையை உணர்த்தும். பிறகு தற்போது யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ நாராயணன், தமன், தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத் போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களும் தங்களுக்கென்று ஒரு பாணியில் இசையமைத்து இசையைக் காலத்திற்கு ஏற்றவாறு அமைத்து வருகின்றனர்.
முடிவுரை
பண்டு தொட்டு தமிழிசையைப் பேணிக்காக்கும் நோக்கில் செயல்பட்ட கலைச் சமூகம் இடையில் தங்களுடைய அங்கீகாரத்தை மட்டும் கருத்தில் கொண்டு பழமையான இசைகளையும் இசைக்கருவிகளையும் பாதுகாக்கத் தவறியது என்பதே முடிவாக வைக்கப்படுகிறது. மேலும் இது போன்ற கலைகளைத் திசைமாற்றும் நோக்கத்திலிருந்து விடுபட்டு தமிழ் சமூகம் நம் தமிழிசையை அழியாமல் பாதுகாக்க முயல வேண்டும்.
துணைநூற்பட்டியல்
1. முனைவர்.கே.ஏ.குணசேகரன்,இசை நாடக மரபு,`அறிவுப் பதிப்பகம்,142,ஜானி ஜான்கன் ரோடு,ராயப்பேட்டை,சென்னை -600 014 .
2. முனைவர்.கி.கீதா, திரைப்படக்கலை, நியூ சென்ட்சுரி புத்தக நிலையம், 41-B, இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர்,சென்னை – 600 098.
3. முனைவர்.ஞா.கற்பகம்,தமிழ்த் திரையிசை ஆளுமைகள்,கற்பக வித்யா பதிப்பகம், சென்னை.
4. நிழல் திருநாவுக்கரசு, திரை இசையில் தமிழிசை, நிழல் வெளியீடு.
ப.கவிப்பிரியா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு)
பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை.
Leave a Reply