தமிழிசையின் வரலாறும், அதன் வளர்ச்சிக்கான பரிந்துரைகளும் – முனைவர். நா. கிரீஷ்குமார்

முன்னுரை

உலகில் தொன்மையான மொழி தமிழ் ஆகும். பண்பாடு, மொழி, இலக்கியம், கலை, போன்றவற்றில் 2000 ஆண்டுகள் முன்பு சிறந்து விளங்கிய மூத்த குடிமக்கள் தமிழர்கள் ஆவர். அவ் வகையில் தமிழர்கள் தம் வாழ்வோடு ஒன்றாகக் கலந்து வழங்கி வந்த இசை முறையே தமிழிசையாகும். இயல், இசை, நாடகம் என அழைக்கப்பட்ட முத்தமிழில் இசை இன்றியமையாததாக விளங்குகிறது.காலத்தால் முற்பட்டது மட்டுமின்றி உலகின் பிற இசைமுறைகளில் முதன்மையானது தமிழிசை. இவ்வாறு சிறப்புமிக்க தமிழிசை உலகெங்கும் உள்ள தமிழர்களால் மேலும் போற்றப்பட வேண்டும் என்பதும் தமிழிசையை மேலும் வளரச் செய்ய பரிந்துரைகளும் இந்தக்கட்டுரையில் பதிவு செய்யப்படுகிறது.

தமிழிசையின்தொன்மை

சங்ககாலத்திற்கு முன்பே தமிழிசை தோன்றி சிறப்பாக வளர்ந்து வந்துள்ளது. தமிழகத்தின் ஒவ்வோர் இடத்தில் வாழ்ந்த மக்களும் தங்கள் இயல்புக்குத் தக்கவாறும் சூழலுக்குத் ஏற்றவாறும், வாழ்க்கைமுறைக்கு ஏற்றவாறும், இசை மரபுகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆகவே இசைக்கருவிகள், இசையமைப்பு, இசைக்கும்முறை ஆகியன இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.  இவற்றைத் தொல்காப்பியக் குறிப்புகளிலிருந்தும், சங்க இலக்கியங்கள் வாயிலாகவும் அறியமுடிகிறது. 

தமிழிசை தனித்துவமுடைய இசை என்பதைச் சங்க இலக்கியங்கள் உறுதிப்படுத்திக் காட்டுகின்றன. இசைக்கருவிகள், பண்ணமைப்பு. ஏழிசைப்பகுப்பு ஆகியவை பற்றி ஏராளமான குறிப்புகள் காணப்படுகின்றன. அக்கால இசையமைப்பு விதிகளுக்கு உட்பட்டு ,திருத்தம் பெற்ற இசையாக இலக்கண முறைமைகளுடன் வளர்ச்சியடைந்துள்ளது, திருத்தம் பெற்ற கலைக்கே இலக்கணம் வரையப்படும். பல இசைத்தமிழ் நூல்கள் வழக்கில் இருந்துள்ளதாகக் குறிப்புகள் உள்ளன.  தமிழில் இருந்து அழிந்துபோன இசைத்தமிழ் நூல்களாக இசைநூல், இசை நுணுக்கம். சிற்றிசை, பேரிசை, இசை விளக்கம், பஞ்சமா பாரதீயம், போன்ற இன்னும் பல நூல்கள் கூறப்படுகின்றன.

சிலப்பதிகாரத்திலும், அதற்குரிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை ஆகியவையும், தமிழ் இசைப் பற்றிக் கூறும் கருத்துக்கள் வியக்கத் தக்கவை. ஓசையின் அளவு, இசையமைப்பு . பண்களின் பெயர்கள், பாடலமைப்பு, தாளவகை, வரிப்பாட்டு, வண்ணங்கள், யாழிசை, குழலிசை,  இசை அலகு பெறல், ஆகியவற்றை தனித்தனியாக விளக்கிக் காட்டுமளவிற்கு தமிழிசை ஈராயிரம் ஆண்டுகள் முன்பு திருத்தமாகவும், சிறப்பாகவும் அமைந்துள்ளது.சிலப்பதிகாரத்தில்  உள்ள இசைச்செய்திகளில், தமிழிசையின் தொன்மையான பண்கள் பற்றிய குறிப்புகள், பண்கள் பிறக்கும் முறைகள், வியக்கத்தக்க இசை நுட்பங்கள் மிகுந்து காணப்படுகின்றன. 

அக்காலத்தில் வழக்கிலிருந்த இசைக்கருவிகளான பலவகை யாழ் ,குழல் தூம்பு. வயிர், சங்கு, கின்னரம் போன்ற கருவிகளும், தோற்கருவிகளான பறை, முரசு, முழவு, தண்ணுமை. தட்டை,  சிறுமுழா, கிணை, துடி, தடாரி, பதலை, எல்லரி. ஆகுளி, பம்பை, மத்தரி, மகுளி, சில்லரி, கொட்டு, பாண்டில் குளிர் போன்ற கருவிகள் சிறப்பாக வழக்கில் இருந்துள்ளன. இந்த அளவு பலவகையான கருவிகள் இன்றைய இசைமுறைகளில் முந்தைய காலம் போல் வழக்கத்தில் இல்லை,  ஆனால் சங்ககால இசை மக்கள் வாழ்வியல் முறையோடு பின்னிப் பிணைந்தது. இயற்கையோடு இணைந்த இசை மக்கள் செவிகளில் குளிர்ந்தது

ஒருதிறம் பாணர் யாழின் தீங்குரல்எழ
ஒருதிறம் வண்டின் இமிரிசைஎழ
ஒருதிறம் கன்ணார் குழலின் கரைபுஎழ
ஒருதிறம் பன்ணார் தும்பி பரந்திசைஊத
ஒருதிறம் மண்ணார் முழவின் இசைஎழ 
ஒருதிறம் அண்ணல் நெடுநீர்அருவி நீர்ததும்ப
ஒருதிறம் பாடல்நல் விறலியர்ஒல் குபுநுடங்க 
ஒருதிறம் வாடைஉள வயின்பூங் கொடிநுடங்க 
ஒருதிறம் பாடினிமுர லும்பாலை யங்குரலின் 
நீடுகிளர் கிழமைநிறை குறை தோன்ற
ஒருதிறம் ஆடுசீர்மஞ்ஞை அரிக்குரல் தோன்ற 
மாறுமா றுற்றனபோல் மாறெதிர் கோடல் 
மாறட்டான் குன்றம் உடைத்து

(பரிபாடல்)

என்ற பரிபாடலில் இயற்கையோடு இயைந்த ஒலிகளை அக்கால தமிழர்கள் எவ்வாறு அவற்றிலுள்ள இனிமையைக்கொண்டே சுவைத்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது.   மேலும் பலவகையான இசைக்கலைஞர்கள் வாழ்ந்துள்ளனர் பாணன்,பாடினி, கூத்தன், பொருநர், கிணையர்,கோடியர், போன்ற பல கலைஞர்கள் வாழ்ந்துள்ளனர் . 

சங்கமருவியகாலத்தில் வளர்ச்சியும் இன்றி மறையவும் இன்றி விளங்கிய தமிழிசைபல்லவர் காலத்தில் பக்தி இலக்கியங்களோடு மறுமலர்ச்சிபெற்றது.  காரைக்கால் அம்மையார், தேவார மூவர் பாடிய தேவாரங்கள், ஆழ்வார்கள் பாடிய திவ்வியப் பிரபந்தங்கள் தமிழிசையோடு சேர்ந்து தமிழுக்கு மேலும் அழகு சேர்த்தன. சோழர்காலம் வரை தமிழிசை தனித்துவமான இசையாகவே விளங்கியது ஆலயங்கள் தோறும் தமிழிசையே ஒலித்தது. தமிழிசையின் வளர்ச்சிக்குச் சோழமன்னர்களின் பங்களிப்பு மகத்தானவை. 

அதன் பிற்காலங்களில் தமிழிசையில் இசைக்கலப்பும், மொழிக்கலப்பும் ஏற்படத் துவங்கின .  13 ஆம் நூற்றாண்டு வரை தமிழிசை என வழங்கப்பட்டு வந்த இசை முறை அதன் பிறகு பல மொழிப்பாடல்கள் சேர்ந்து கர்நாடக சங்கீதம் என்ற பெயராக மாற்றப்பட்டது . பண்கள் இராகங்களாகப் பெயர் மாறின, ஆனால் தமிழ் இசைமுறையானது சில மாற்றங்களுடன் வளர்ச்சி பெற்றது.  தமிழோடு பாடப்பட்ட தேவாரங்கள்மட்டும் பண்ணிசை எனவும் வழங்கிய நிலையில் இன்றுவரை வழக்கில் உள்ளது.

தமிழிசை இயக்கம்

தமிழக இசை அரங்குகளில் தமிழ்மொழிப்பாடல்கள் குறைவாக ஒலிப்பதைக் கேட்ட செட்டிநாட்டு அரசர் இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தமிழிசைக் உயிரூட்ட ஆர்வம் கொண்டார். அண்ணாமலை அரசர் இசைக் கலையில் மிகவும் ஈடுபாடு உடையவர்கள்.  1929 ஆம் ஆண்டிலேயே சிதம்பரத்தில் முதன்முதலில் தமிழிசைக்காக ஓர் இசைக் கல்லூரியினை நிறுவி 1932-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகமாக வளர்த்தார்கள்.  புகழ்பெற்ற இசை விற்பன்னர்களை ஆசிரியராக அமர்த்தி தமிழிசையை வளர்க்கச் செய்தார்கள். முதன் முதலில் சங்கீத கலாநிதி டி. எஸ். சபேச ஐயர் (1929-1936) வரை இசைத் துறைத் தலைவராகப் பதவி ஏற்கச் செய்து தமிழிசையை வளரச் செய்தார்.  அவரைத் தொடர்ந்து சங்கீத கலாநி திடைகர் வரதாச்சாரியார் (1937-1941), சங்கீத கலாநிதி. க. பொன்னையா பிள்ளை (1942-1943), சங்கீத கலாநிதி திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை (1944-1945), சங்கீத கலாநிதி சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை (1946-1954), இசைஅரசு எம்.எம். தண்டபாணி தேசிகர் (1955-1976), பத்மஸ்ரீ மதுரை சோமசுந்தரம் (1977-1984), பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் (1985-1987) போன்ற புகழ்பெற்ற வித்வான்களைக் கொண்டு தமிழிசையை மாணவர்களுக்குக் கற்பித்துத் தமிழிசையை வளர்க்கச் செய்தார்கள். அண்ணாமலை அரசரைத் தொடர்ந்து அவர்தம் புதல்வர் இராஜா சர். முத்தையாச் செட்டியாரும் தமிழிசையைத் தம் தந்தையார் வழியில் போற்றினார்கள்.

இந்திய நாட்டில் இசைக் கலையினை நான்கு ஆண்டு கற்பித்துப் பட்டயம் வழங்கிய முதற்பல் கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமே ஆகும். இவ்வாறு இசைக்கலைக்கு வாழ்வளித்த அண்ணாமலை அரசர் அவர்களை இசை சபாக்கள், தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுப் போற்றினர். 21-12-1932-ல் சென்னையில் நடைப் பெற்ற இசைக்கலை கழகத்தினர் (Music Academy) நடத்திய இசை மாநாட்டினையும், 24-12-1933-ல் நடைபெற்ற தென்னிந்திய இசை மாநாட்டினையும் அரசர் அவர்கள் தொடங்கிவைத்து அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள்.

அண்ணாமலை அரசரின் நன்கொடை

மேலும், மறைக்கப்பட்டிருந்த இசைத் தமிழைத் தோற்றுவித்து வளர்த்தல் வேண்டும் என்ற நல்லெண்ணம் அண்ணாமலை அரசர் அவர்களுக்கே முதன்முதலில் தோன்றியது. இவ்வெண்ணமே தமிழிசை இயக்கமாக உருவெடுத்தது,

16-11-1940-ல் நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் செட்டிநாட்டு அரசர் அவர்கள் தமிழிசை வளர்ச்சிக்காக ரூபாய் பதினைந்தாயிரம் நன்கொடை அளித்தார்கள் புதியனவாகத் தமிழிசைப் பாடல்கள் இயற்றுவதை ஊக்குவிப்பதற்கும், இசைவாணர் சிலரின் நினைவில் மட்டும் தங்கிய அரிய பழந்தமிழ் இசைப்பாடல்களைப் பொதுமக்களிடம் பரவ செய்வதற்கும். வெளியிடத்தக்க இசைப்பாடல்களை அச்சிட்டு வெளிப்படுத்துவதற்கும் அப்பொருள் பயன்படுத்தல் வேண்டும் எனக் கருதினார்கள், மேலும் அப்பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை தாங்கிய சென்னை மாநில ஆளுநர் அவர்களின் பெயரால் பல்கலைக் கழக மாணவர்களுள் சிறந்த தமிழ் இசைப்பாடல் பாடுபவருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் பரிசுத்திட்டம் ஒன்றிற்கு ஓராயிரம் ரூபாயும் நன்கொடையாக அன்று வழங்கினார்கள்.

அண்ணாமலை நகரில் முதல் தமிழிசை மாநாடு

பின்பு, தமிழிசை வளர்ச்சிக்காக முதன் முதலாக மாநாடு ஒன்று அண்ணாமலை நகரில் கூட்டப்பட்டது. இம்மாநாடு 14-8-1911 முதல் 17-8-1941 வரை நான்கு நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் அண்ணாமலை அரசர் விடுத்த செய்தி, “தாய்மொழியில் உள்ள பாடல்களை இசையரங்கின் முடிவில்தான் பாடுவது என்று ஒதுக்குவது, தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படுகிறது பிறமொழியில் உள்ள பாடல்களின் இசை ஓசையைத்தான் தமிழர்கள் அறிய முடிகிறதேயன்றி முற்றிலும் பாட்டின் உணர்ச்சியுள் புகுந்து அனுபவிக்க முடிவதில்லை பாடல்கள் தமிழிலிருந்தால் இசை நயத்துடன் கருத்தின் நயத்தினையும் அறிந்து பாடுகின்றவர் உணர்ச்சியோடு ஒத்த உணர்ச்சி அடைதல் இயலும். முழுதும் தமிழ்ப் பாடல்களாக அமைந்த இசையரங்குகள், இசைக் கலைஞர்களால் விரைவில் நடைபெறக்கூடும். என்று மாநாட்டில் அறிவித்தார். 

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இசைப்பாடல் போட்டிகள்

தமிழ் இசைப் பாடல்களைப் புதியனவாக இயற்றுபவர்களுக்கும். பிறர் இயற்றியுள்ள தமிழ் இசைப்பாடல்களை முறையாகப் பாடுபவர்களுக்கும் ஊக்கம் ஊட்டுவதற்காக, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், இரண்டு பெரும் போட்டிகளை நடத்தியது. இப்போட்டிகள் 1941 செப்டம்பர் 22, 23, 24 ஆம் நாட்களில் ஒன்றும், 19 2 பிப்ரவரி 20, 21, 22 ஆம் நாட்களில் ஒன்றும் ஆக இரண்டு முறை நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களில் பலருக்கு 200 ரூபாய் முதல் பல பரிசுகளைப் பல்கலைக் கழகம் வழங்கியது. நாட்டில் புகழ்பெற்ற பல கலைஞர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். அவர்களில் தி. இலக்குமணப் பிள்ளை, பாபநாசம் சிவன், கே. பொன்னையா பிள்ளை, மாரியப்ப சுவாமிகள், கீழ்வேளூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை முதலிய பலர் இப்பரிசுகளைப் பெற்றவர்கள். இவ்வாறு பரிசு வழங்கப்பெற்ற 46 பாடல்கள், இசை அமைப்புடன் பரிசுபெற்ற பாடல்கள் என சுவர தாளக் குறிப்புடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப்பட்டன.  இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழிசை மீண்டும் புத்துயிர் பெற்றது.  இவ்வாறு தமிழிசைக்கு புத்துயிர் ஊட்டிய செட்டிநாட்டு அரசர் இராஜா சர். அண்ணாமலை அரசர் வழிநின்று மேலும் நாம் தமிழிசையை உலகெங்கும் உள்ள தமிழ் சந்ததியினருக்கும் ஏனைய இசை ஆர்வலர்களுக்கும், இசை பயில்வோருக்கும் தமிழிசையைப் பரவச் செய்ய ஆவன செய்யவேண்டும்.

தமிழிசை வளர்க்க தகுந்த பரிந்துரைகள்

1.     தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இசைக் கல்லூரிகளிலும் தமிழில் இசை உருப்படிகள் கற்பிப்பதைக் கட்டாயமாக்கப்படல் வேண்டும்

2.     பள்ளிகளில் இசைக் கல்வியைக் கட்டாய பாடமாக்கி தமிழில் கற்பிப்பதை வலியுறுத்தல் வேண்டும்

3.     தமிழிசைப் பாடநூல்கள் வெளிவர ஊக்குவித்தல் வேண்டும்

4.     தமிழிசைப் போட்டிகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடத்துதல் வேண்டும்.

5.     தமிழிசைப் பாடல்களை மின்னணுப் பதிவுகளாகத் தக்கோரைக் கொண்டு பதிவுசெய்து ஆவணப்படுத்துதல் வேண்டும்.

6.     இசை அரங்குகளில் தமிழிசைப் பாடல்கள் பாடுவதற்கு ஊக்குவித்தல் வேண்டும்

7.     தமிழிசை தொடர்பான ஆய்வுகளை ஊக்குவித்து ,ஆய்வு மாநாடுகள் நடத்துதல் வேண்டும்

8. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழிசை சார்ந்த தொகுதிகளை இன்னொரு பரிமாணமாக ஒலிப்பதிவு செய்து youtube செய்து பரவச் செய்யவேண்டும்.

9.  அடிப்படைப் பாடங்களான கீதங்கள், சுரசதிகள், வண்ணங்கள் போன்றவைகளைத் தமிழிலேயே சொல்லிக்கொடுத்து பாடச் செய்யவேண்டும்.

10.  அரசு அலுவலகங்கள், வங்கிகள், பேருந்து நிலையங்கள், இரயில்நிலையங்கள், விமான நிலையங்களில் அலுவல் சார்ந்த அறிவிப்புகள் தவிர்த்து மீதி நேரங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் ஓய்வுநேரங்களில் தமிழிசை சார்ந்த பாடல்களை மக்களின் மனத்தினைக் கொண்டு சேர்க்கும் வண்ணம் குறைவான ஒலியுடன் ஒலிக்கச் செய்யலாம்.

11.  கிராமப் பகுதிகள், நகரங்கள் போன்ற மக்கள் வசிக்கும் பகுதியில் தமிழிசை பரப்பும் நோக்கில் தன்னார்வலர்கள்போன்று இசைபயிலும் இறுதி ஆண்டு மாணவர்கள், இசைக்கலைஞர்கள் வாரத்திற்கு ஒருநாள் சென்று தமிழிசையைப் பொதுமக்களுக்கு, குழந்தைகளுக்கு ஆர்வம் ஊட்டி இசையைத் தமிழில் கற்றுக் கொடுப்பது மூலம் தமிழிசையை வளரச் செய்யலாம்.

12.  தமிழ் தாய்மொழியாகக் கொண்ட கலைஞர்கள் அனைவரும் தமது நிகழ்ச்சிகளில் தமிழிலேயே பெரும்பாலான பாடல்கள் இசைக்க இருப்பதாக மன உறுதி கொள்ளவேண்டும்.

13.  இசை கலைஞர்கள் குழுவாகச் சென்று மாதத்திற்கு ஒருமுறையேனும் அருகாமையில் உள்ள பகுதிகளுக்குச் சென்று தமிழிசையை நிகழ்ச்சிகளாக நடத்தவேண்டும்.

14.  சமூக ஊடகங்களில் தமிழ்ப்பாடல்கள் இசைத்து அதன் பண், தாளம், இயற்றியவர் விபரங்கள், அந்தப் பண்ணின் மேன்மை, பாடலின் நயம், பாடலின் இலக்கியச் சுவை போன்றவைகளை விளக்கலாம்.

15.  தமிழிசைச்சங்கங்களைக்கிராமங்கள்தோறும்இயங்கஊக்குவிக்கவேண்டும்.

16.  தேவாரம், திவ்வியப்பிரபந்தம் ஆகிய பக்தி இலக்கியங்களை இசையுடன் அனைத்து கோயில்களிலும் இசைக்க ஆவன செய்யவேண்டும். இசை பயின்றவர்களுக்கு ஓதுவார் போன்று பணி நியமனம் கொடுத்து தமிழ் இசையையும் வாரத்திற்கு ஒருமுறை கற்பிக்கச் செய்யவேண்டும்.

துணைநூற்பட்டியல்

1. டாக்டர். ஏ.என். பெருமாள் : தமிழர் இசை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1984, சென்னை-600113.

2.  தமிழிசைக் கலைக் களஞ்சியம்.  தொகுதி.3.,முனைவர். வீ.ப.க. சுந்தரம், இரண்டாம் பதிப்பு-2006

3.  உ.வே., சாமிநாதையர்.  : சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், சென்னை, 1949.

4  ஆ. தட்சிணாமூர்த்தி : “இசைக் கலையின் வரலாறு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், வெற்றிச் செல்வி வெளியீட்டகம், தஞ்சாவூர், 1980.

5.   ப. சுந்தரேசன்.  “சங்ககால இசை” இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு விழாமலர், சென்னை,1968.

முனைவர். நா. கிரீஷ்குமார்,

உதவிப்பேராசிரியர், இசைத்துறை, அண்ணாமலைப்பல்கலைக்கழகம்.

அண்ணாமலைநகர்.

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*