சங்ககாலத் தமிழிசை மரபில் தோற்கருவிகள் – திருமதி. கிருபாஞ்சனா கேதீஸ்

ஆய்வுச் சுருக்கம்  

பண்டைய கால தமிழர்கள் ஒலிகளைத் தங்களது தேவைக்கு ஏற்றவாறும் அதன் நாத அமைப்புக்கு ஏற்றவாறு பல வகைகளாகப் பிரித்து இசைக்கருவிகளாக மாற்றினார்கள். பறவைகள், விலங்குகள், மரங்களின் அசைவு, அருவிகளின் ஒலி என இயற்கையோடு இணைந்த ஒலிகளை சீரான முறையில் வளர்ச்சியுற்ற நிலையில் அதற்கான தோற்றத்தைக் கொடுத்து இசைக்கருவிகளாகத் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளில் பயன்படுத்தினார்கள்.

இசைக்கருவிகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பண்களை இசைக்கக் கூடியவற்றைப் பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளத்தினைப் பொருத்தமான வகையில் ஒலிக்கும் கருவிகளைத் தாளக் கருவிகள் என்றும் வகுக்கலாம். தாளக்கருவிகளை முழக்கியவுடனேயே ஓர் உற்சாகமும் உந்துதலும் ஏற்படுகின்றது. ஆகையாலேதான் சங்ககால மக்களது அன்றாட வாழ்வியல் முதற்கொண்டு, விழாக்கள் என அனைத்திலும் தாளக்கருவிகள் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன.

அவ்வாறாகத் தோற்கருவிகளை நோக்கும்போது, வீரமிக்க நிகழ்வுகளில் அறிவித்தல், வீரமுழக்கம் போன்ற விடயங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழிசையானது சங்ககால மக்களின் வாழ்வியலில் தொடக்கம் பெறுகின்றது. அதனோடு இணைந்ததாகக் கருவிகள், பாடல், ஆடல் என தமிழிசை தனது வளர்ச்சிப் பாதையைக் கொண்டிருக்கின்றமை காணலாம். இவ்வாறாகத் தோற்கருவிகள் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலமும் தோற்றம் பெற்ற காலமும் என நோக்கின், அது சங்ககாலமே ஆகும். அத்தகைய பழமைச் சிறப்புமிக்க இசைக்கருவிகளில் பல இன்று பல வழக்கொழிந்தும், இன்னும் சில பரிணாம வளர்ச்சி கொண்டும் காணப்படுகின்றன. இத்தகைய தன்மையினைக் குறிப்பாகத் தோற்கருவிகள் தொடர்பில் நோக்குமாறு, இவ்ஆய்வு ஆய்வுப்பிரச்சனையாக முன்வைத்தும், இன்றைய தலைமுறையினருக்கு வெளிப்படுத்துவதும் அதனை மீள்பார்வை செய்வதனை நோக்காகக் கொண்டும் இவ்ஆய்வு ஆராய்கின்றது.

சங்ககால மக்களது வாழ்வியல்

சங்ககால மக்கள்  வாழ்க்கை இயற்கை அம்சங்களோடு இணைந்ததாகவே காணப்பட்டது. காதல், வீரம் என தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி அவற்றிற்கு இசையையும் இசைக்கருவிகளையும் கையாண்டார்கள். அகத்திணை, புறத்திணை என காதல், வீரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களது வாழ்க்கையின் அனைத்து விடயங்களிலும் இசைப் பின்னிப் பிணைந்தே காணப்பட்டது. தலைவன், தலைவி காதலின்போது ஏற்படுகின்ற இன்ப துன்ப உணர்வுகளை இசை வாயிலாகவே வெளிப்படுத்தி நின்றார்கள். வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகள் கேட்கும் ஒலிகள் நெறிப்படுத்தப்பட்டு இசையாகவும் தாளமாகவும் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

                                                       “ஐதமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்

                                                       கைவார் நரம்பின் பாணர்க் கோக்கிய

                                                       நிரம்பா வியல்பிற் கரம்பைச் சீறூர்”          (புறம்.302: 5-7)

சிற்றூர்களிலும் பாணர்கள் பாடல்களை யாழிசையுடன் பாடி மக்களை மகிழ்வித்துள்ளனர். நகரம், பேரூர் மட்டுமன்றிச் சிற்றூர்களிலும் இசை பரவியிருந்தமையை இதன் வாயிலாக அறியலாம்.

                                         “ குன்றகச் சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து

                                         தொண்டகச் சிறுபறைக் குரவை யயர”               (திருமுரு.196-197)

அதில் குன்றில் வாழ்வோர் கூடி மகிழ்ந்து தொண்டகச் சிறுபறை ஒலிக்கச் சேர்ந்து குரவை ஆடுகின்றதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களது வாழ்க்கையில் இசையோடு பயணித்தமை இவ்வாறான பாடல்கள் வாயிலாகத் தெளிவாகப் புலப்படுகின்றது.

சங்ககாலத்தில் தோற்கருவிகள்

பல வகையான தோற்கருவிகள் சங்ககாலத்தில் தாளத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. தாளமானது பாட்டை ஒழுங்குபடுத்துவதோடு கேட்பதற்கு இனிமை தருகின்றது. அதற்குத் தாளக்கருவிகளே துணையாக நிற்கின்றன. வீரத்தை உணர்த்த, வெற்றியை அறிவிக்க, வெறியாடல் நிகழ்த்த எனப் பல வகையான நிகழ்வுகளுக்குத் தாளக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. தண்ணுமை, ஆகுளி, பறை, கொட்டு, தட்டை, தழல், துடி, பதலை, பம்பை, முழவு, முரசு என இன்றும் ஏராளமான தோற்கருவிகள் அக்காலத்தில் வாசிக்கப்பட்டன.

தண்ணுமை

தண்ணுமை என்னும் கருவியைப் போர்க்களத்தில் முழக்கியுள்ளனர். நீண்டு குவிந்த இரண்டு பக்கங்களை உடைய இதன் இசை முழக்கத்தைக் கேட்டு போர்வீரர்கள் உற்சாகமாகவும் வேகத்துடனும் போர்க்களத்தில் போராடியுள்ளார்கள்.

                           “மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை

                           இன்னிசை கேட்ட துன்னுரு மறவர்

                           வெற்றிதரு வேட்கையர் மன்றம் கொண்மார்

                           பேரம ருழந்த வெருவரு பறந்தலை”      (புறம்.270: 8-11)

இதில் தண்ணுமையின் அரித்த குரல் வீரர்களைப் போருக்கு அழைப்பதாகவும் அதன் ஒலி அவர்களுக்கு வீரமுறுக்கு ஏற்றுகிறது. அவர்கள் தம்மை மறந்து போருக்கு ஆயத்தமாகின்றதாகக் கூறப்படுகிறது.

முரசு

முரசு ஓர் தோற்கருவியாக மட்டும் பார்க்காமல் போற்றுவதற்குரிய தெய்வத் தன்மை கொண்ட அம்சமாகவே சங்ககாலத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. இது பெரிய உருவமைப்புக் கொண்ட கொட்டாகும். மயிர்க்கண்ணையுடைய தோலால் போர்த்தப்பட்டு வார்களால் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும்.

              “சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை

              அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ

              டொருங்ககப் படேஎ னாயின்…”               (புறம்.72, 7-9)

இப்பாடலில் முரசின் முக்கியத்துவத்தினை நன்கு உணரலாம். ஏனைய பொருட்களை விடவும் போர் முரசுக்கு மிகச் சிறந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. முரசு எனும் கருவி அக்காலத்தின் சிறந்து விளங்கியமைக்கும் இதன் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக இப்பாடல் விளங்குகின்றது.

                           “இன்னிசைய முரசு முழங்கப்

                           பொன்மலிந்த விழுப்பண்டம்

                           நாடார நன்கிழி தரும்

                           ஆடியற் பெருநாவாய்…”               (மதுரை.80-83)

இதில் கப்பலில் பண்டங்கள் ஏற்றிச் செல்லும்போது முரசு இசைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து மக்கள் தாங்கள் பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கின்ற தருணங்களிலும் முரசினை அடித்து மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கும் இப்பாடல் உதாரணமாகும்.

பறை

 வாரால் இறுகக் கட்டப்பட்டு ஒருமுகம், இருமுகம் என இரு வகைப்படும் குறுகிய தடி கொண்டு இசைக்கப்படு கின்றது. அரச அறிவிப்புகளை மக்களுக்குத் தெரியப்படுத்தப் பறை வாசிக்கும் வழக்கமானது ஆதி காலத்தில் காணப்பட்டது. பறவைகளை விரட்டவும் பறை முழக்கும் வழக்கம் காணப்பட்டதாகவும் இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. போர்ப்பறை, வெருப்பறை, தட்டைப்பறை, வெறியாட்டுப்பறை, சாக்காட்டுப்பறை என்று சத்தம் மற்றும் அதன் பயன்பாடு கருதி பறை பல பெயர்களால் அழைக்கப்பட்டது.

              “நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு

              மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென

              வான்றோய் மீமிசை அயருங் குரவை”               (மலை.320-322)

நறவைக் குடித்து மகிழும் குன்றக்குறவர் தங்கள் பெண்களுடன் மலை மீது குரவையாடிக் களிக்கின்றதாக அந்த நேரத்தில் சிறுபறை முழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

                           “அரிப்பறை வினைஞர் அல்குமிசைக கூட்டும்

                           மலரணி வாயிற் பொய்கை யூர”               (ஐங்.81: 2-3)

அரிப்பொலியுடைய பறை என்பதினால் அரிப்பறை என்று கூறப்பட்டுள்ளது. செல்வந்தர்களது வீட்டு வாசலில் இவ்வாறான மங்கல இசை எழுப்பும் வழக்கம் இதன் வாயிலாக உணர்த்தப்பட்டுள்ளது.

முழவு

சங்ககால இலக்கியத்தில் முழவு எனும் வாத்தியம் பற்றி அதிகளவான செய்திகள் காணப்படுகின்றன. முழவின் வட்டமான மயிர்க்கண் பரவலாக இங்கு கூறப்பட்டுள்ளது. அகன்ற பரப்பைக் கொண்டு எருமைத் தோலால் போர்த்தப்பட்டு வடிவமைக்கப்பட்டதாகும். தண்ணுமைக் கருவியைப் போன்றே தற்கால மத்தளத்துடன் ஒப்புமையுடையதாக காணப்படுகின்றது.

                                         “மதமுடை முழவுத்தோல் ஓச்சி” (புறம். 50:12)

என உருவப்படுத்தியுள்ளமை, அதன் அமைப்பு, உருவத்தன்மை என்பவற்றை அறிய உதவுகின்றது.

                                         “ மண்முழா அமைமின்; பாணர்யாழ் நிறுமின்”              (புறம்.52:14)

என்பதிலிருந்து முழவின் ஒரு பக்கம் மண் அல்லது மாவு பூசி அமைக்கப் பெற்றிருக்கும் எனும் அமைப்புத் தன்மையை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. 

“மண்ணார் முழவின் கண்ணகத் தசைத்த

                           விரலூன்று வடுவின் தோன்றும்”                            (அகம்.155:11)

எனும் அகநானூற்றுப் பாடலிலிருந்து விரல் கொண்டு அடித்து முழவின் ஒலி எழுப்புவதை அறியலாம். அதன் கண்ணில் விரலால் அடித்த தழும்பு இருந்துள்ளது. மற்றும் கோல் கொண்டும் அடித்துள்ளமையையும்

                           “மண்களை முழவின் தலைக்கோல் கொண்டு” (மலை.370)

என்ற பாடலினால் கோலின் பங்கும் உண்டு என அறியமுடிகின்றது. மேலும் விழாக்களின் போது முழவு பயன்படுத்தியுள்ளமை அதிகமாக காட்டப்பட்டுள்ளது.

                                         “முழவுக்கண் புலரா விழிவுடை ஆங்கண்”              (நற்.220:4-3)

                                         “விழவும் உழந்தன்று முழவும் தூங்கின்று” (நற். 320:1)

                                         “விழவுறு பறியா முழவிழிழ் மூதூர்”                   (பதிற்று.15:18)

எனும் பாடல்களின் மூலம் முழவிசை விழாக்களில் சிறப்புத் தன்மையாக விளய்கியமை காணலாம்.

              “மன்றப் பலவின் மாச்சினை மந்தி

              இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்

               பாடின் தெண்கண் களிசெந் தடிப்பின்

              அன்னச் சேவல் மாறெழுந் தாலும்” (புறம்.128:1-4)

பையில் கட்டி மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள முழவை மந்தியானது அடித்துக் களிப்பதை இப்புறநானூற்றுப் பாடல் விளங்குகின்றது.  அது பொதுவான இடத்தில் தொங்கவிடப்படுகின்றதும் இது பையில் இட்டு பாதுகாப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை என்பன இப்பாடல் எமக்கு உணர்த்துகின்றது.

கிணை

  கிணை எனும் கருவியும் சங்ககாலத்தில் முக்கிய இடம் வகித்துள்ளமையைப் பல பாடலடிகளின் மூலம் அறியலாம். இரு கண்களிலும் அடித்து இசைக்கப்படும் தாளவிசைக்கருவியாகும். இதை இசைப்போர் கிணைவர் என்றும் அவனின் மனைவி கிணைமகள் என்றும் அழைத்தனர்.

                           “வளநீர் வாட்டாற் றெழினி யாதன்

                           கிணையேம் பெரும்”               (புறம். 396:13-14)

எனும் பாடலிலிருந்து வாட்டாற்று எழினி ஆதன் என்ற சிற்றரசனுக்கு உரிமையான இணைஞர் இருந்துள்ளதை அறிய முடிகின்றது. போர்க்காலத்தில் கிணை வாசிக்கும் வீரர்கள் இருந்துள்ளமையும் புலப்படுகின்றது.

                           “விசிபிணித் தியாத்த அரிகோல் தெண்கிணை

                           இன்குரல் அகவுநர் இரப்பின் நாடொறும்”                  (அகம்.249:3-4)

என்பதிலிருந்து கிணை இழுத்துக் கட்டப்பட்டுள்ள வார் உடையது. சிறிய கம்புகளால் தெளிவான கண்களில் அடித்து வாசிக்கப்படுவது இனிமையான ஒலியுடையதும் என விபரிக்கப்பட்டுள்ளது.

                                         “பாடின் தெண்கினை கறங்க”

எனும் பாடலின் வாயிலாக பாடலுக்குத் துணையாக நின்று வாசிக்கும் வாத்தியமாகவும் விளங்கியமை தெளிவாகின்றது.

ஆகுளி            

சங்ககால மக்களிடையே பழக்கத்திலிருந்த கருவிகளுள் ஆகுளியும் ஒரு சிறப்பான கருவியாகும். மலைபடுகடாம் பாடலில் ஆரம்பப் பகுதியிலேயே இக்கருவி பற்றி வெளிப்படுத்துகின்றது.

                           “ திருமழை தலை இய விருணிற விசும்பின்

                            விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத் 

                           நிண்வார் விசித்த முழவொ டாகுனி

                            நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாட்டில்”          (மலை.1-4)

என ஆகுளி முழவுக்கு இணையாகவும் பக்க துணையாகவும் அமைந்த கருவியாகக் காணலாம். முழவொலி இடிபோன்று விண்ணெதிரே தோன்றும் அதனுடன் இணைந்து ஆகுளியும் இடி போன்று கடினமாகவும் துடிப்பாகவும் அமைந்திருக்க வேண்டும் என எடுத்துக் கொள்ளலாம். மலைப்படுகாம் பகுதியில் ஆகுளி பற்றிய தகவலைத் தருகின்ற இன்னுமொரு பாடலைப் பார்க்கலாம்.

                           “விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக்

                           குடிஞை இரட்டும் நெடுமலை அடுக்கத்து”     (மலை.140-141)

இதிலிருந்து கைவிரல் கொண்டு தட்டி ஆகுளி இசையொலி எழுப்பப்படுவதாகக் காட்டப்பட்டுள்ளது.

தடாரி 

அகலமான கண்ணை உடைய பறை போன்ற அமைப்பைக் கொண்டதாகவே தடாரி எனும் கருவி காணப்பட்டிருக்கிறது. இக்கருவி பற்றிப் புறநானூற்றில் பாடல் பகுதிகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

                                         “சிதாஅர் வன்பிற் சிதர்ப்புறத் தடாரி

                                         ஊன்சுகிர் வலந்த தெண்கன் ஏற்றி

                                         விரல்விசை தவிர்க்கும் மரலையில் பாணி”    (புறம்.381:12-14)

துண்டிக்கப்பட்ட தோல் வார்களினால் தடாரி இறுக்கமாகப் பிணித்துக் கட்டப்பட்டுள்ளது. அதன் வெளிப்பகுதி சிதர்ப்புடன் காணப்படுகின்றது. தடாரி விரலினால் அடித்து வாசிக்கப்படும் கருவியாகும்.

                           “அகன்கண் தடாரி தெளிர்ப்ப வொற்றி

                           வெந்நிரல் வியன்களம் பொலிகென்றேத்தி”  (புறம்.370:18-19)

போர்க்களத்தில் தடாரி எனும் இசைக்கருவி இசைக்கப்படுவதற்கான பாடல் போர் வெற்றி பெற அதனைத் தட்டி வாழ்த்துவதாகப் புறநானூற்றுப் பாடல் கூறுகின்றது. தடாரி அகன்று விரிந்த கண்ணை உடைய கருவி என்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பம்பை

நற்றிணையில் ஒரு பாடலடி இக்கருவிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.  இதன் வடிவமைப்பைப் பார்க்கையில் வார்களால் கட்டப்பட்ட உருளை வடிவமான பறை போன்ற அமைப்பை உடையதாகும்.

                           “சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும்

                           நரம்பொடு கொள்ளும் அத்தத் தாங்கண்

                           கடுங்குரல் பம்பைக் கதநாய் வடுகர்”             (நற்.212:2-5)

காட்டினில் வடுகர் நாயுடன் வந்ததாகவும் அந்நாய் கோப மிகுதியால் கடுங்குரலையுடைய பம்பை போன்று குரைத்ததாகவும் இப்பாடலது இறுதியடி பொருள் அமைந்துள்ளது. இதிலிருந்து பம்பை எனும் கருவி கடுமையான ஒலியமைப்பை உடையது என்று கருதலாம்.

இவ்வாறாக இன்னும் பல தோற்கருவிகள் சங்ககால இலக்கியத்தில் காட்டப்பட்டுள்ளன. எல்லரி, குளிர், கொட்டு, சல்லரி, தட்டை, தழல், துடி, பதலை, மத்தரி, மகுளி என ஏராளமான கருவிகள் உள்ளதாக அக்காலப் பாடல்கள் வாயிலாக அறியமுடிகின்றது. அவைகள் மக்களது வாழ்வியலோடும், போர்க்காலத்திலும் எனப் பல சந்தர்ப்பங்களில் அவர்களினால் இசைக்கப்பட்டுள்ளது தெளிவாகின்றது.

முடிவுரை

சங்கத் தமிழர்கள் தங்களது வாழ்க்கையில் இசை, இசைக்கருவிகள் என்பவற்றைத் தங்களோடு சேர்த்தே பயணித்தனர். அதில் தோற்கருவிகள் சங்ககாலத் தொடக்கத்திலிருந்து முடிவு வரை பயன்பட்டுள்ள ஓர் கருவியாக உள்ளது. போர்க்களத்தில் வெற்றிக் களிப்பு மற்றும் போர் தொடக்கம் என அனைத்து விடயங்களிலும் தோற்கருவிகள் பிரதான இடத்தை வகித்துள்ளன.

போர் வீரர்களின் வீர உணர்வைத் தூண்டி அவர்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் போரிடுவதற்குத் துணையாக இக்கருவிகள் விளங்குகின்றன. அறிவித்தல்கள் வழங்குவதற்கும் அறிவிப்புக்களைத் தெரிவிக்கவும் இக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளமையைப் பாடல்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

வீரவாழ்க்கை, அரச வாழ்க்கை மட்டுமன்றி இசைக்கலைஞர்களும் தோற்கருவிகளை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதும் நன்கு புலப்படுகின்றது. பிற வகைக்கருவிகளை விட சங்ககால மக்களிடையே தோற்கருவிகளே பெருமளவிற்குப் பயன்பாட்டில் இருந்தமைக்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. அவர்களோடு இணைந்து அனைத்திலும் பின்னிப்பிணைந்ததாகவே இருந்திருக்கின்றது. அன்றிலிருந்து மக்களோடு சேர்ந்து பயணித்த இசைக்கருவிகள் இன்றுவரை அவ்வாறே நகர்ந்து செல்கின்றது. 

உசாத்துணை நூல்கள்

1.   தனபாண்டியன். து.ஆ, இசைத்தமிழ் வரலாறு (பகுதி 3), தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2001.

2.   அருணாசலம். மு, கிராமத்து உள்ளங்கள், புரவலர் புத்தக பூங்கா, கொழும்பு, 2012, முதற்பதிப்பு, 2010.

3.   கலைவாணி. இரா, தமிழ் வேலு.சு, சங்க இலக்கியத்தில் இசை, ஏழிசைப் பதிப்பகம், மயிலாடுதுறை, 2005 டிசம்பர், முதற்பதிப்பு.

4.   கலைவாணி. இரா, தொல்காப்பியத்தில் இசை தொன்மையும், தொடர்ச்சியும்;, ஏழிசைப் பதிப்பகம், மயிலாடுதுறை, 2014, முதற்பதிப்பு.

5.   சுந்தரம் வீ.ப.கா, தமிழிசைக்கலைக் களஞ்சியம் (முதலாம் தொகுதி), பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, 2006, இரண்டாம் பதிப்பு.

6.   பெருமாள். ஏ.என், தமிழர் இசை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, 1984, முதலாம் பதிப்பு. 7.           வித்தியானந்தன். சு, தமிழர் சால்பு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 19

திருமதி. கிருபாஞ்சனா கேதீஸ்

முதுநிலை விரிவுரையாளர் (வீணை), சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்,  கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*