சங்க இலக்கியத்தில் இசைக் கருவிகளும் தகவல் தொடர்பும் – த.கிறிஸ்டல் ரெஜி

முன்னுரை

            மனித நாகரிகத்தின் சிறப்பைகலைகளைக் கொண்டு அறியலாம். முத்தமிழ் கலைகளான இயல், இசை, நாடகம் எனப் போற்றப்படும் கலைகள் செம்மொழியாம் தமிழ்மொழியின் இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் இடம்பெற்று நம் தமிழ் மொழிக்கும் நாட்டிற்கும் பெருமைச் சேர்த்துள்ளன. சிறப்பாக இசைக் கலைமக்கள் வாழ்க்கையோடு இயைந்திருந்தது. போலச் செய்தல் என்ற அடிப்படையில் பலவகையான ஒலிகளை மனிதனால் உருவாக்க முடிந்தது. அவ்வொலிகளை உருவாக்குகின்ற போதே இசைக்கருவிகள் தோற்றம் பெற்றன. இசைக் கருவிகள் ஒலிக்கின்ற நுட்பமான ஒலிவேறுபாடு தகவலைச் சுமந்துச் சென்றது. அவ்வொலியினுடைய வேறுபாட்டையும் தகவலையும் புரிந்துக்கொள்கின்ற அறிவுக் கூர்மை படைத்தவர்களாகச் சங்ககால மக்கள் விளங்கினர்.

இசைக்கருவிகள்   

          இசைக்கருவிகள் முதலில் பண்ணிசை கருவிகளாகவும் தாள இசைக்கருவிகளாகவும் வகைப்படுத்தப்பட்டன. பண்ணிசைக் கருவிகளாக குழலும் யாழும் அமைந்திருந்தன. தாள இசைகருவிகளாக பறை, தண்ணுமை,முழவு முதலியன விளங்கின. பிற்காலத்தில் இசைக்கருவிகளை 1.நரம்புக்கருவிகள் 2.துளைக்கருவிகள் 3.தோல்கருவிகள்  என்ற அடிப்படையில் பாகுபாடுசெய்தனர்.

நரம்புக்கருவிகள்

          நரம்புகளை மீட்டி இசை  உண்டாக்கும் கருவிகள்      நரம்புக்   கருவிகள் எனப்படும்.

யாழ், வீணை, தம்பூரா, கோட்டுவாத்தியம் முதலியவை நரம்புக் கருவிகள் ஆகும். நரம்புக் கருவிகளில் மிகவும் பழமையானது யாழ். யாழை மீட்டிப் பாடல் பாடுபவர் பாணர் எனப்பட்டனர்.”பாணர் என்பதற்கு இசைபாடுவோர் அல்லது பண்பாடுவோர் என்பது பொருளாகும்” (சு.வித்யானந்தன், 1971. ப.314) யாழ்தகவல் தொடர்பு சாதனமாகவும் பயன்படுகிறதை சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. மன்னனை சந்தித்து பரிசில் பெறுவதற்காகச் சென்ற பாணர்கள் சிறியயாழை இசைத்து மன்னனுக்கு தாம் இரந்த பரிசில் இது வென தெரிவித்ததகவல், 

“களங்கணியன்னகருங்கோட்டுச்சீறியாழ்

நாயம்புரிந்துறையுநர்நடுங்கப்பண்ணி

அறஞ்செய்தீமோஅருள்வெய்யோயென

இஃதுயாமிரந்தபரிசில்”(புறம்.145:5-8)

என்னும் பாடல்வரிகளில்இடம்பெற்றுள்ளது.

துளைக்கருவிகள்

        காற்றிசைக் கருவிகள் துளைக்கருவிகள் என்று அழைக்கப்படுகின்றது . குழல்,  கொம்பு, சங்கு போன்ற வைதுளைக் கருவியினுள் அடங்கும். இவ்வகைக்கருவிகளும் சங்ககாலத்தில் தகவல் தொடர்பு சாதனமாக பயன்பட்டன.

குழல்

               தொன்மைக் காலசமுதாயத்தில் மனிதஎலும்புகளிலும் விலங்கு எலும்புகளிலும் குழல்என்னும் இசைக்கருவி செய்யப்பட்டது என்றுக் கூறுவர்.“குழலானது, மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலிஎன்னும்ஐந்தானும்செய்யப்படும். குழலில் முல்லைக் குழல், ஆம்பல்குழல், கொன்றைகுழல், சிறுவங்கியம்,  பெருவங்கியம், ஏழில் முதலிய வகைகள் இருந்த “(முனைவர்.மு.சந்தானம்.,1998.ப.82) என்றுமு.சந்தானம் குறிப்பிட்டுள்ளார்.ஆயர்கள் ஆநிரைகளுக்குக் கருத்துரைக்கும் தகவல் தொடர்புச் சாதனமாகக் குழலைப் பயன்படுத்தினர்.

நீர்பருகச் செல்லும் ஆநிரைகளை அழைக்கவும்(அகம்.225:7-8)

ஓரிடத்தில்சேர்க்கவும்(அகம்.399:10-12)

ஆயர்கள் குழல் ஊதினர். குழலின் ஓசையினால் தகவலைப் புரிந்துகொண்ட ஆநிரைகள் அதற்கு ஏற்பச் செயல்பட்டன.

                        “மாலைநீதையெனக்கோவலர்தனிக்குழலிசைக்கேட்டுப்

                         பையென்றநெஞ்சத்தேம்”( கலி.118:13-14)

என்றப் பாடலில் ஆயர்கள் மாலைக் காலத்தில் ஆநிரைகளுக்காக இசைத்த குழலோசை பிரிவுத் துயரினால் வருந்தும் மங்கையரை வருத்தும் மாலைப் பொழுதின் வருகையை அறிவிப்பதாக அமைந்துள்ளது.

“ தூங்கும்குரவையுள்நின்பெண்டிர்கேளாமை

ஆம்பற்குழலாற்பயிர்பயிரெம்படப்பைக்

காஞ்சிக்கீழ்ச்செய்தேங்குறி”(கலி.108:61-63)

என்ற கலித் தொகைப்பாடலில் தலைவன் தலைவியிடம் பிறர் அறியாமல் கூற விரும்பியதகவலை,  பலரோடு நடைபெறும் குரவைக் கூத்தின் போது ஆம்பற் குழலில் இசைத்து தலைவிக்கும் தனக்கும் மட்டும் தெரிந்த ஒலிக்குறிப்பினால் புலப்படுத்தினான் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

கொம்பு

          பாலை நிலத்தில் புகுந்த ஆநிரைகளை மீட்பதற்கு கோவலர் கொம்பு ஊதினர். கொம்பின் ஒசைக் கேட்ட ஆநிரைகள் பாலை நிலத்தினின்றும் கொன்றை மரத்தின் நிழலில் தங்கின என்று

“கடற்றடைமருங்கின்கணிச்சியின்குழித்த

உடைக்கண்நீடமைஊறலுண்ட

பாடின்தெண்மணிபயங்கெழுபெருநிரை

வாடுபுலம்புக்கெனகோடுதுவைத்தகற்றி

ஒல்குநிலைக்கடுக்கைஅல்குநிழல்அசைஇ(அகம்.399:6-10)

இப்பாடலடிகள் குறிப்பிடுகின்றன. இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைவன் மலைகள் நிறைந்த ஊரைவந்து அடைந்தவுடன் எழுப்பும் ஊதுகொம் பொலிதலைவன் வந்து சேர்ந்தமையைத் தலைவிக்கு உணர்த்துவதாய்   அமைந்ததை,

“ எக்கண்டுபெயரும்காலையாழநின்

கல்கெழுசிறுகுடிஎய்தியபின்றை

ஊதல்வேண்டுமால்சிறிதேவேட்டொடு

வேய்பயில்அழுவத்துப்பிரிந்தநின்

நாய்பயிர்குறிநிலைகொண்டகோடே”( அகம்.318:10-15)

என்னும் பாடலடிகள் விளக்குகின்றன.

சங்கு

பகைவரது அரண்களையும் அவர்களது நிலங்களையும் கைக்கொண்ட பொழுது சங்கையும் கொம்பையும் முழக்கித்தாம் பெற்ற வெற்றியை அறிவித்த செய்தியை முல்லைப்பாட்டில்,

“வேண்டுபுலங்கவர்ந்தஈண்டுபெருந்தானையொடு

விசயம்வெல்கொடியுயரிவலனேர்பு

வயிரும்வளையும்ஆர்ப்ப”( முல்லைப்.89-92)

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தோல்கருவிகள்

            கால அளவைமையமிட்டுத் தட்டொலியைச் சிறப்பாகக் கொண்டு பண்ணிசைக்குப் பொருந்தும் வகையில் இசைப்பது தோல்கருவியாகும். “மரத்தால் செய்யப்பட்டுத் தோல்கொண்டு மூடப்பட்ட கருவிகள் தோற் கருவிகளாகும்.அவைபேரிகை, படகம், இடக்கை, உடுக்கை,மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தருணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழி, கைப்பறை, துடி, பெரும்பறைஎன்பன“ என்கிறார் சண்முகம் செட்டியார்.(சர்.ஆர்.கே.சண்முகம்செட்டியார் (உ.ஆ.)1946.பக்.105-106)

                சங்ககாலத்தில் தண்ணுமை, பறை, முரசு, முழவு ஆகிய தோல் கருவிகள் தகவல் தொடர்புச் சாதனங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

தண்ணுமை

       தண்ணுமை என்பது எழுச்சிக்குரிய இசைக் கருவியாகும். தண்ணுமை வாரினை இழுத்துக் கட்டியகண் உடையது. ”தண்ணுமை தோற்கருவியில் முதன்மையானதாகக் கருதப்படுகின்றது இக்காலத்து மத்தளம் என்பது தண்ணுமையைக் குறிக்கும் ”(செ.பழனிச்சாமி,  1989,ப. 153) என்கிறார் பழனிச்சாமி.

             போரில் வெற்றிப்பெற்றபெருமையைதண்ணுமைஅடித்துவெளிப்படுத்தினர்.

“இருபெருவேந்தர்மாறுகொள்வியன் களத்து

ஒருபடைகொண்டுவருபடைபெயர்க்கும்

செல்வம்உடையோர்க்குநின்றன்று விறல்என

பூக்கோள்ஏயதண்ணுமைவிலக்கி(அகம்.174:1-4)

   போருக்கு செல்லும் வீரர்களுக்கு அடையாளப் பூவைவழங்கு வதற்கும்போருக்கு அழைப்பதற்கும் தண்ணுமையை முழக்கினர். தண்ணுமையின் ஒலிகேட்கின்ற வீரர்கள் தகவலைப்புரிந்து கொண்டு  போர்ப்பூவைப் பெற்றுக் கொண்டனர்.இதனை,

“பாசறைப்பூக்கோளின்றென்றறையும்

மடிவாய்த்தண்ணுமையிழிசினன்குரலே”(புறம்.289:8-10)

என்பதால் அறியலாம்.

பாலை நிலத்து ஆறலைக்கள்வர்கள் அந்நிலம்வழி செல்லும் வணிகர்களை மறித்து அவர்கள் பொருளை வழிப்பறி செய்ய செல்லும் போதுத தண்ணுமையை ஒலிக்கச் செய்வர். வணிகர்கள் பாலைநிலத்தில் தண்ணுமை ஒலியைக் கேட்கும் போது ஆறலைக்கள்வர்களின் வருகையை  உணர்வர் என்ற செய்தியை

“வேற்றுமுனைவெம்மையிற்சாத்துவந்திறுத்தென

வளையணிநெடுவேலேந்தி

மிளைவந்துபெயருந்தண்ணுமைக்குரலே”(குறுந்.390:3-5)

இப்பாடல்வழி அறிய முடிகிறது.

முரசு

            முரசு என்பது பெரிய உருவில் அமைந்த கொட்டாகும். குடைவுடைய மரத்தாலும் பரந்ததண்டை மூடியுள்ள தோலாலும் இறுக்கிக்கட்டப் பெற்றதோல் வாராலும் முரசு செய்யப்பட்டிருந்தது. குறுந்தடிக் கொண்டு தோல் பகுதியைப் புடைத்து முரசு முழக்கம் செய்வர்.போர்க்களத்தில் பல்வேறு நிலைகளில் முரசானது ஒலிக்கப்பட்டது. போர்க்களத்தில் போர்நடை பெறுகின்ற போது முரசறைந்து போரில் ஈடுபடும் வீரர்களுக்கு ஒலிவழி ஊக்கப்படுத்தினர் என்பதை

“தொல்மூதாலத்துஅரும்பணைப்பொதியில்

இன்இசைமுரசம்கடிப்புஇகுத்துஇரங்க

தெம்முனைசிதைத்தஞான்றைமோகூர்” (அகம்.251:9-10)

என்ற பாடல்வழி  அறியலாம்.

“விசும்புகண்புதையப்பாஅய்வேந்தர்

வென்றெறிமுரசின்நன்பலமுழங்கி”( குறுந்.380:1-2)

என்ற குறுந்தொகைப்பாடலில் அரசன் வெற்றிப் பெற்ற செய்தியை முரசறைந்து அறிவித்தனர் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. பகைமன்னனை வென்ற அரசன்தான் வென்ற நாட்டிலிருந்து திறைப்பொருளைப் பெற்றுக்கொள்கின்ற போதும் அத்தகவலை அறிவிக்க முரசறைந்த செய்தியை,

“ஆடுகொள்முரசம்இழுமெனமுழங்க

நாடுதிறைகொண்டனம்”(அகம்.334:1-3)

என்ற இப்பாடல்வழி அறிய முடிகிறது.  மதுரைக்காஞ்சி, கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து பொருட்களை இறக்குமதிச் செய்கின்ற நேரமானது முரசறைந்து அறிவிக்கப்பட்டது என்ற செய்தியைக் குறிப்பிட்டுள்ளது.

“இன்னிசையமுரசுமுழங்க

பொன்மலிந்தவிழுப்பண்டம்

நாடாரநன்கிழிதரும் ஆடியற்பெருநாவாய்’(மதுரைக்.79-82)

பறை

         சங்க காலதமிழகத்தில் பறைஎன்றதோல் இசைக்கருவிமிகவும் அதிகமாக புழக்கத்தில் இருந்துள்ளது. தோற்கருவிகளுக்குப் பொதுபெயராகப் பறை என்பது வழங்கப்பட்டுள்ளது.பறை என்பது போர்கருவியின் பொதுப்பெயர் என்று தேவநேயப்பாவணர் குறிப்பிடுகின்றார். பறைகள் பெரும்பறை, சிறுபறை என்னும் இருபிரிவில் அடங்கும். பெரும்பறைகள் முழவு என்று வழங்கப்படும்.பறைகளும் தகவல்தொடர்பில் பெரும்பங்குவகிக்கின்றன. துடி, தடாரி, ஆகுளி போன்றவை பறை இனத்தைச் சார்ந்தவை.

எல்லாரும் கேட்ப தறைந்து எப்பொழுதும்

சொல்லால் தரப்பட்டவள்சொல்லுக

 பாணியே மென்றார் அறைகயென்றார் பாணித்தார்”(கலி.102:13)

என்ற பாடலில் ஏறு தழுவுவதற்கு அழைப்பு விடுக்கும் போது பறை அறைந்து அறிவித்தனர் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.

முடிவுரை

          தகவல் தொடர்பு இன்று பல்வகையான நிலைகளில் விரிந்து பரவி ஆழ்நிலையில் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகின்றது.அந்தவகையில் சங்க இலக்கிய இசைக் கருவிகளான தண்ணுமை, பறை, முழவு போன்ற தோற்கருவிகளும் குழல், கொம்பு, சங்கு போன்ற துளைக் கருவிகளும் யாழாகிய நரம்புக் கருவியும் தகவல் தொடர்புச் சாதனங்களாக ஒவ்வொரு நிகழ்வினையும்  அறிவித்தன.உள்ளத்தின் மிக ஆழமான உணர்ச்சிகளைப் பண் வெளிப்படுத்தியது.

த.கிறிஸ்டல் ரெஜி ,

பேராசிரியர், தமிழ்த்துறை 

பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*