முன்னுரை
தமிழரின் வாழ்வியலில் இசையைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றிணைந்துள்ளது. தமிழரின் வாழ்வு பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றியிருக்கிறது. இசையின் அருமையும், பெருமையும் அறிந்த தமிழர் முத்தமிழில் நடுநாயகமாக அதனை வைத்துச் சிறப்பித்தார்கள். மனிதன் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திய ஒரு கருவிதான் இசை. சங்ககால மக்கள் இசையில் நுட்பமான புலமையைப் பெற்றிருந்தனர். வேட்டைச் சமூகம் சிறு சிறு குழுக்களாக வேட்டையாடச் செல்லும்போது தகவல் பரிமாற்றத்திற்காக இறந்த விலங்குகளின் கொம்பு மற்றும் மூங்கில் போன்றவற்றில் துளையிட்டுச் சத்தத்தை எழுப்பினர். தொடக்கத்தில் தற்காப்புக்காகவும், தகவல் பரிமாற்றத்திற்காகவும் பயன்பட்ட இவ்விசைக் கருவிகள் நாளடைவில் பிறரை மகிழ்விக்கப் பயன்படலாயிற்று. தமிழ் இலக்கியங்களில் இசைக்கருவிகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தமிழ் இலக்கியங்களில் இசைக் கருவிகள்
பதின்மூன்றாம் நூற்றாண்டு நூலான சங்கீதரத்னாகரம் ‘பேரி’ என்னும் இசைக்கருவியைப் பற்றிக் கூறுகிறது. 65 செ.மீ நீளமும், 25 செ.மீ. குறுக்களவும் கொண்டு செம்பாலான இக்கருவி ஒரு பக்கம் கையாலும், ஒரு பக்கம் கம்பாலும் அடிக்கப்படும். இதில் இரணபேரி, ஆனந்தபேரி போன்ற வகைகள் உண்டு. இசைக்கருவிகளின் வகைகள் பற்றிப் பதிற்றுப்பத்தில் கீழ்க்காணும் பாடலில் கூறப்பட்டுள்ளது.
புணர்புரி நரம்பின் தீந்தொடைப் பழுனிய
வணரமை நல்யாழ் இளையர் பொறுப்பப்
பண்ணமை முழவும் பதலையும் பிறவும்
கண்ணறுத்தியற்றிய தூம் பொடு சுருக்கிக்
காவில் தகைத்த துறைகூடு கலப்பையர்
(பதிற்று : 41)
சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதையில் குழல், யாழ், மத்தளம் போன்ற பல இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
குழல்வழி நின்றது யாழே; யாழ் வழித்
தன்னுமை நின்றது தகவே; தன்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
நின்றது இசைத்தது ஆமந் திரிகை
(சிலப்: 139-142)
‘பறை செய்தி யாழின், பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப’ (தொல்-பொருள் : 18) என்ற தொல்காப்பிய வரியிலிருந்து பறை, யாழ் போன்றவை தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படையாக இருந்துள்ளன என்பதை அறியமுடிகிறது. தேவாரத்தில் யாழ், குழல், கொக்கரி, சச்சரி, தக்கை, முழவம், மொந்தை, மிருதங்கம், மத்தளம், தமருகம், தந்துபி, குடமுழா, தத்தலிகம், முரசம், உடுக்கை, தாளம், துடி, கொடுகொட்டி முதலிய இசைக்கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பேரிகைப் படகம் இடக்கை உடுக்கை
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலைக் குடமுழாத் தக்கைக் கணப்பறை
தமருகம் தண்ணுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம்
மாசில் தகுநிச்சம் விரலேறு பாகம்
தொக்க உபாங்கம் துடிபெறும் பறையென
மிக்க நூலோர் விரித்துரைத் தனரே
அடியார்க்கு நல்லாருரை மேற்கோள்
எனத் தோற்கருவிகள் கூறப்பட்டன என்று யாழ்நூல் பாயிரவியலில் (ப.எ.52) குறிப்பிடப் பட்டுள்ளது.
பறை
தமிழினத்தின் தொன்மையான அடையளமாகத் திகழ்வது தோல்கருவியான பறை ஆகும். பறையானது இறந்த விலங்குகளின் தோலைப் பதப்படுத்திச் செய்யப்படுகின்றது. குறிஞ்சி நிலத்திற்கு தொண்டகப்பறையும், முல்லை நிலத்திற்கு ஏறுகோட்பறையும், மருதத்திற்குக் கிணைப்பறையும், நெய்தலுக்கு மீன்கோட்பறையும், பாலைக்குத் துடிப்பறையும் கருப்பொருளில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். போரில் அடைந்த வெற்றியைப் பறையால் சாற்றி மகிழ்ந்ததைப் புறநானூறு கூறுகிறது. சங்ககாலத்தில் செய்திகளை அறிவிப்பதற்கும், போர் வீரர்களையும், உழவர்களையும் உற்சாகப் படுத்தவும் தோற்பறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘கைக்கச டிருந்த வென் கண்ணகன் தடாரி’ (பொரு: 70) என்று பொருநராற்றுப்படையில் பொருநன் ஒருவன் தடாரப்பறையை அடித்துக்கொண்டு தன் குடும்பத்துடன் கரிகாலனைத் தேடிச் சென்றதைக் கூறுகிறது.
குழல்
குழல் கருவிகளில் காணப்படும் ஒன்பது துளைகளையும் திறந்தும், பிறகு ஒவ்வொன்றாக முறையே விரல்களினால் மூடியும் வாசிக்கப்படும்போது ஏழு சுவரங்கள் பிறக்கின்றன. மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி போன்றவற்றால் இக்கருவி செய்யப்படுகின்றது.
பல்லாதந்த கல்லாக் கோவலர்
கொன்றையர் தீங்குழல் மன்றுதோறு இயப்ப (நற்றி: 8)
என்று நற்றிணையில் கழலின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. மேலும் ‘ஆம்பல் என்று கஞ்சத்தார் செய்த குழவை’ என்று குறிஞ்சிப் பாடலில் கூறப்பட்டுள்ளது.
கொம்பு
கொம்பு பண்டைக்காலத்தில் விலங்குகளின் கொம்பைக் கொண்டு செய்யப்பட்டது. தற்போது உலோகங்களால் செய்யப்படுகிறது. இது சுமார் 4 அடி முதல் 6 அடி வரை இருக்கும். அக்காலத்தில் மன்னர்கள் வெளியே வந்தாலும், போரில் வெற்றி பெற்றாலும் இக்கருவி இசைக்கப்படும். ‘மின்னிரும் பீலி அணிந்தழைக் கோட்டோடு’ (பா-5) என்று மலைபடுகாடாமில் மயில் பீலியால் அலங்கரிக்கப்பட்ட கொம்பு என்று அதன் அழகு வர்ணிக்கப்பட்டுள்ளது. ‘நாகசுவரத்தின் தாய் பண்டைய ஊதுகொம்பு. இந்த ஊதுகொம்பு பின்னாளில் கட்டைக்குழல் என்ற முகவீணையாக உருவாகி, திமிரி, இடைப்பாரி, பாரி என்று பல்வேறு வடிவங்களைக் காலங்காலமாக தன்னுள் கொண்டு, இன்றைக்கு நம்மிடையே நாதசுவரமாக வலம் வருகின்றது’ (தமிழிசை வரலாறு ப.74) என்று கூறப்பட்டுள்ளது.
யாழ்
ஆதிமனிதன் வேட்டையாடும்போது வில்லின் நாண், அம்பு எய்தவுடன் ஒருவித ஓசை எழுவதை உணர்கிறான். அதுவே நரம்புக்கருவியான வில்யாழ் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. சங்ககால இலக்கியக் குறிப்புகளிலிருந்து பெரும்பாணர் பேரியாழ் இசைப்பதிலும், சிறுபாணர் சீறியாழ் இசைப்பதிலும் வல்லவர்களாகத் திகழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது. அதுபோல ‘சீவகன் ஏந்திய யாழ் கோடபதி; நரசிம்மபல்லவன் பயின்றது பரிவாதினி யாழ்; கச்சிப்பியாழ் கலைமகள் கைக்கொண்ட சிறப்புடையது’ (தமிழிசை வரலாறு ப.71). காலத்தால் முற்பட்ட வில்யாழ் குறித்த செய்தி பெரும்பாணாற்றுப்படையில் இடம்பெற்றுள்ளது.
புழல் கோட்டுத் தொடுத்த
மரல்புரி நரம்பின்
வில்யாழ் இசைக்கும் விரலெறி குறிஞ்சி (பெரும்: 180-182)
இந்த வில் யாழ் வில் வடிவில் அமைந்திருக்கும் என்றும், 21 நரம்புகளை உடையது என்றும் யாழ்நூல் குறிப்பிடுகிறது.
முரசு
பண்டைக்காலத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த முரசானது இலக்கியங்களில் பல உவமைகளிலும் கூறப்பட்டுள்ளது. பனைமரத்தைக் கொண்டு முரசுகள் செய்யப்பட்டதைக் கீழ்க்காணும் மதுரைக்காஞ்சி பாடல் கூறுகிறது.
மாகால் எடுத்த முந்நீர்போல
முழங்கும் இசைநன் பனை அறைவனர் நுவல’
மேலும் ‘இன்னிசை முரசும் இடைப்புலத்து ஒழிய’ என முரசின் இசையும் மதுரைக்காஞ்சியில் கூறப்பட்டுள்ளது.மன்னர்கள் காலத்திலிருந்த முரசில் வீரமுரசு, தியாகமுரசு, நியாயமுரசு என மூன்று வகைகள் உண்டு.
தூம்பு
தூம்பு என்ற இசைக்கருவியானது யானையின் துதிக்கையின் துளை போன்று செய்யப்பட்டிருக்கும். தூம்பு இசைப்பவர்களை ‘பல் இயக் கோடியர் புரவலன் பேர் இசை‘ (பா-125) சிறுபாணாற்றுப்படையில் கோடியர் என்று அழைக்கப்பட்டுள்ளது. இதை ‘கழைவளர் தூம்பின் கண்ணியம் இமிர’ என்று மலைபடுகடாம் விவரிக்கிறது. இக்கருவியே பிற்காலத்தில் தம்புரா என்றானது.
முடிவுரை
பழங்காலத்தில் பயன்படுத்திய பல இசைக்கருவிகள் பாதுகாக்கப்படாமலும், அதற்குரிய அங்கீகாரமின்மையாலும் அழிந்துவிட்டன. புல்லாங்குழல், பறை, கொம்பு, மத்தளம், உருமி, உடுக்கை நாதசுவரம் போன்றவை தமிழர்களின் தொன்மையையும், சிறப்பையும் பறை சாற்றுவதாக விளங்குகிறது. தமிழர்களின் பண்பாட்டை உலகுக்கு உணர்த்தும் நமது மரபு சார்ந்த இசைக்கருவிகளை இசைக்கும் இசைக்கலைஞர்களைப் பொருளாதார அடிப்படையில் நலிவடையாமல் ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
துணை நூல் பட்டியல்: தமிழிசை வரலாறு, நா.மம்மதுஇ, நாதன் பதிப்பகம், 43, காவேரி தெரு, சாலிகிராமம், சென்னை – 93.
யாழ்நூல், சுவாமிகள் விபுலாநந்தஅடிகளார், 1974, கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை., சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, பரிபாடல், நற்றிணை, மதுரைக்காஞ்சி.
ஆசிரியர்:
சு.கோபாலகிருஷ்ணன்
முதுகலைத் தமிழாசிரியர்,அரசினர் மேல்நிலைப்பள்ளி,
கருவாக்குறிச்சி, மன்னார்குடி (தாலுக்கா)
திருவாரூர் மாவட்டம்,
Leave a Reply