முன்னுரை
தொன்மை சிறப்போடு இன்றைய புதுமையும் இணைத்துக் கூறும் இலக்கியங்களாகத் தமிழ் இலக்கியங்கள் திகழ்கின்றன. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என முத்தமிழின் வெளிப்பாடாகத் தமிழ் இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் இசைக் கூறுகளைச் சமூகவியல் ஆய்வு அணுகுமுறை மற்றும் விளக்க முறை ஆய்வு அணுகு முறையில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
தமிழ் இலக்கியமும் இசையும்
எழுத்து, சொல், பொருள் என மூன்றிற்கும் இலக்கணம் கண்ட நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்திற்கு முந்திய தமிழ் இலக்கியங்கள் தொடங்கி தற்காலம் வரையிலான இலக்கியங்கள் இசைக்கூறுகளை வெளிப்படுத்தும் வகையிலே அமைகிறது. இசையாவது நரம்படைவால் உரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொன்னூற் றொன்றாகிய ஆதி இசைகள் எனச் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் கூறுவர்.’1
அனைத்து இலக்கியப் பாடல்களும் இசையமைத்து பாடும் வண்ணம் யாப்பு அமைதியும் மன அமைதியும் கொண்டு விளங்குகின்றன. யாழ்முறி பாடியது தண்டகப் பாவலான பாடல்கள் பாடியமை எல்லாம் இசை கலைக்குச் சான்றுகளாக அமைகின்றன. இசை நுணுக்கம். மதிவாணன் நாடகத் தமிழ் என இசைக்காகவே எழுதப்பட்ட நூற்களும் தமிழில் உண்டு. ஆற்றுப்படை நூற்கள் மட்டுமன்றி காலந்தோறும் பல்வேறு இலக்கியங்களிலும் இசை பற்றிய நேரடிச் செய்திகளும் இசையோடு தொடர்புடைய மறைமுகச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன. மலைபடுகடாமில் பல்வேறு இசை கருவிகளைப் பலாக்காய் மூட்டை போலக் கலைஞர்கள் எடுத்துச் சென்றனர் என்ற செய்தி இடம்பெறுகிறது. செல்லும் வழி எங்கும் கலைஞர்களை அந்தந்த இடத்தைச் சார்ந்த மக்கள் உபசரித்த பாங்கினையும் ஆற்றுப்படை நூற்களில் வாயிலாக அறிய முடிகிறது.
சங்க இலக்கியங்கள் அடுத்து அற இலக்கியங்களில் இசை பற்றிய கருத்துக்கள் குறைவாகவே இடம்பெறுகின்றன. ஆனால் கி.பி ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த பக்தி இலக்கியங்களில் இசை பிரவாகம் கொண்டு வெளிப்பட்டது எனலாம். காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த திருவாலங்காடு மூத்த திருப்பதிகங்கள் தெய்வ தமிழிசை பாடல்களுக்கு சிறப்புடைய இலக்கியங்களாக திகழ்கின்றன.’2
சிற்றிலக்கியங்களில் இசைக்கு பரந்துபட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தற்கால இலக்கியங்களில் இசை பற்றிய கருத்துக்கள் இடம்பெறுவதைக் காண முடிகிறது குடுமியான் மலை இசைக் கல்வெட்டுகள் தமிழரின் இசையறிவைக் காட்டும் தாராசுரம் கோயிலில் தமிழரின் இசைநுட்பத்தை வெளிப்படுத்தும் இசை படிக்கட்டுகள் அமைந்துள்ளன.
கல்லுக்கும் இசையுண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் ஏழிசை படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படிக்கட்டும் ஒவ்வொரு இசையை எழுப்பும் வண்ணம் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். தேவயானி என்பது பழந்தமிழரின் இசைப்பாட்டு என்கின்றார் அவர் தமிழில் எழுத்துக்களும் இசையோடு வரும் என்பதை,
பொருந்திய அன்பிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவனிய
நரம்பின் மறைய என்பமனார் புலவர் (தொல் -)
என்ற நூற்பாவில் எடுத்துரைக்கிறார்.3 தமிழின் எழுத்துக்களின் பிறப்பே இசையோடு தொடர்புடையதாகிறது அதனால் தான் அவ்வெழுத்துக்கள் கொண்டு பாடப்படும் பாடல்களும் இசையாகின்றன. மூலதாரம் தொடங்கிய எழுத்துதோசை ஆளத்தியாய் பின் இசையென்றும் பன்னென்றும் பெயராம்.’4
திணையும் பண்ணும்
பண்டைத் தமிழர்கள் திணை வாழ்வியலை கொண்டவர்கள். தமிழர்கள் தங்கள் வாழும் திணைக்குரிய யாழையும் பண்ணையும் தனித்தனியாக கொண்டிருந்தனர் இந்நிலை தமிழர்களின் பண்பாட்டுச் செழுமையைக் காட்டுகிறது.’5 திணை கருத்தின் வழியாகவே இந்த ஏழ்பெரும் பாலைகட்கும் பெயரிட்டனர் என்பதால் இயற்கையோடு கலந்த இசை வாழ்வியலைத் தமிழர்கள் மேற்கொண்டதை அறிய முடிகிறது. தமிழகத்தின் தொன்மைக் காலத்தில் ஏழ்பெரும் பாலைகட்கும் தலைமையாக நின்றும் அதி அடிப்படை பாலையாக நின்றும் விளங்கியது. செம்பாலை சங்க இலக்கியக் காலத்தில் முல்லை யாழ் (பெரும்பாண்) எனப் பெயர் பெற்றது பின்னர் செம்பாலை என பெயர் பெற்றது இன்று அது அரிகாம்போதியாகி உள்ளது.’6 பண்டைக்கால பண்ணும் பாடல்களும் காலச்சுழலுக்கு ஏற்ப மாற்றம் பெற்றுள்ளதை இலக்கியங்கள் வாயிலாகவும் நேரிடை அனுபவங்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.
அக இலக்கியங்களில் இசை கூறுகள்
தலைவன் தலைவியின் மனநிலையை உணர்த்துவதற்கும் மக்களின் மகிழ்ச்சி வெளிப்பாட்டிற்க்கும் உரியதாகவும் இசை பயன்பட்டுள்ளது. மக்களின் தொழிற் களங்களிலும் இசை பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காலந்தோறும் எழுதப்பட்ட இலக்கியங்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்களிலும் காணமுடிகிறது. திணைக் குற்றும்போது பாடும் பாடல் வள்ளைப்பாட்டு ஆகும். இதனைத்,
திணை குறுமகளிர் இசைபடு வள்ளை’ (மலைபடுகடாம் 343)
பாவடி உரல பகுவாய் வள்ளை (குறு – 89)
என்ற சங்க இலக்கியப் பாடல் வரிகள் புலப்படுத்தும். துணங்கைக் கூத்து, குரவைக் கூத்து, வெறியாட்டு போன்ற நிகழ்வுகளில் இசைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சேரி விழாவின் கண்மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற நிகழ்வினைத் துணங்கைக் கூத்து என்பர். ஆடவர்களும் துணங்கைக் கூத்தாடுவது உண்டு இவ்வாறு துணங்கைக் கூத்தாடும் இடத்திலும் தலைவனைக் காணவில்லை. நானும் ஆடுகிற களத்திற்குரிய ஒருமானே என ஆதிமந்தியார் இயற்றிய பாடலில் இசையோடு இணைந்த காதலுணர்வை உணரமுடிகிறது. இசையின் காரணமாகவே தலைவனைத்தேடும் தலைவி சங்கப்பாடலில் இடம்பெறுகிறார் எனலாம்.
மன்னர் குழீஇய விழ
மகளிர் தழீஇ துணங்கையாலும் (குறுந்தொகை -31)
என்ற குறுந்தொகை பாடல் விழாக்களில் மகளிர் ஆடிய துணங்கைக் கூத்தை வருணிக்கிறது.
தலைவியின் பசலை நோய் நீக்கும் வேலன் வெறியாட்டிலும், குரவையாட்டத்திலும் இசையே முன்னிலை வகிக்கிறது.
கூடுகொள் இன்னிலம் கறங்க
ஆடுஅணி அயர்ந்த அகன்பெரும்பு (அகம் – 18)
அருங்கடி வேள் முரசொடு வளைஇ
அரிக்கூட்டு இன்னியம் கறங்க (மதுரைக்காஞ்சி 610 -612)
இதில் வெறியாட்டிற்குரிய இசைக்கருவியாக இன்னியம் பயன்படுத்தப்பட்டுள்ளதை உணர முடிகிறது. ஒவ்வோர் இசைக்கருவிகளின் இசைத்தலுக்கும் தனித்தனி சொல்லாடல் இருப்பது தமிழரின் இசை வளத்தையும் பெருவாரியான இசை பயன்பாட்டையும் உணர்த்துகிறது. சான்றாக இன்னியம் கறங்க யாழ் மீட்டல் குழல், ஊதுதல், முரசு அதிருதல் போன்றவை மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் ஒரு மருந்தாகவே இசை விளங்குகிறது என்பதைச் சங்க பாடல்கள் உணர்த்துகின்றன.’7 அதனால் தான் விழாக்களிலும் தலைவியின் பசலை நோய் நீக்கும் வெறியாட்டிலும் இசை பயன்படுத்தப்பட்டுள்ளது.
வேலன் வெறியாட்டோடு தொடர்புடைய பாடலை தலைவி விரும்பி கேட்கும் வகையில் அமைந்த குறுந்தொகை பாடலானது பாடல் வேட்கையை காட்டுகிறது
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே (குறு – 23)
என்ற பாடல் வாயிலாகத் தலைவியின் நொது மலர் வரைவு என்ற மன அழுத்தத்தை நீக்குவதாக அகவன் மகள் பாடல் அமைவதை உணர முடிகிறது இங்கு அகவன் மகள் என்றால் குறி கூறி பாட்டு பாடும் பாணர் இனத்துப் பெண் என்கிறது தமிழ் இணைய பல்கலைக்கழகம். பாடினி, விரலியர், அகவன் மகள் போன்றோர் இசைக் கலைஞரோடு தொடர்புடைய பெண்கள் ஆவார்கள் என்பதை அறிய முடிகிறது. சாதாரண குடும்பத்துப் பெண் தொடங்கி இசையைக் கலையாகக் கொண்டும் வாழும் பெண்கள் வரை இசையோடு தொடர்புடைய மாந்தர்களைப் பற்றிய குறிப்புகளைக் காலந்தோறும் உள்ள இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. மக்கள் வாழ்வியலின் ஒரு அங்கமாக இசை பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பல்வேறு சான்றுகள் வாயிலாக உணர முடிகிறது வாழ்க்கையின் எந்த ஒரு நிகழ்விலும் இசை குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெற்றுள்ளது தமிழகத்தின் பண்பாட்டுச் சிறப்பேயாகும்.
புற இலக்கியங்களில் இசை
போரின் தொடக்கமும் முடிவும் இசை கொண்டே தெரிவிக்கப்பட்டன முரசு என்னும் இசைக்கருவி வெற்றியின் சின்னமாக அறிவிப்பு கருவியாக இருந்தது வீரக்குடியினரின் வீரத்தின் அடையாளமாகவும் முரசு இருந்ததை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
பொதுவியல் தூங்கும் விசியுறு தண்ணும்மை
——————————–
அதுபோர் என்றும் என ஐயும் உளனே (புறம் 7 -9)
என்ற பாடல் தண்ணுமை ஒலி எழுப்புதலைக் காட்டுகிறது தன்ணுமை எனும் இசை கருவியானது வேகமாக வீசும் காற்றினால் தானாகவே ஒலி எழுப்புகிறது. அவ்வொலியோசையைக் கேட்ட வீரர்கள் போரின் அறிவிப்போ என ஐயம் கொண்டதாகப் புறநானூறு தெரிவிக்கிறது.
போரில் புண்பட்ட வீரர்களின் புண்ணையாற்றவும் அவர்களின் உடல் வலியை மறக்கச் செய்யவும் காஞ்சி பண்ணைப் பாடியுள்ளமையை மலைபடுகடாம் உணர்த்துகிறது.
கொடுவரி பரந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவரிசி விழுப்புண் தனிமார்க் காப்பென
அறல்வாழ் கூந்தல் கொடிசியர் பாடல் (மலைபடுகடாம் 302-304)
கொடிசியார் என்ற சொல் வழக்கால் இங்குப் பாடல் பாடுவோர் குறிப்பிடப்படுவதைக் காண முடிகிறது. மருந்து பாதி விருந்து பாதி என்பார்கள். உடல்நலம் பேணலில் மருந்து சிறப்புற வேலைசெய்ய மனஅமைதி வேண்டும். அந்த மனஅமைதியைத் தருவதற்கு இசை மனிதர்களுக்கு என்றும் தேவைப்படுகிறது. இசை மக்களின் பாதுகாப்பிற்கும் பயன்பெற்றுள்ளதை இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
ஆறலை கள்வர் படைவிட அருளின்
மறுதலை பெயர்க்கும் மரூவுஇல் பாலை (பொருநராற்றுப்படை 21 -23)
என்ற பாடல் வரிகள் இசைக்குக் கள்வர்கள் மயங்கியதைக் காட்டுகிறது தீத்தொழில் புரியக்கூடியவர்களையும் நல்லொழுக்க வழியில் வாழச் செய்யும் வல்லமை இசைக்கு உண்டு என்பதை உணர்ந்தறியலாம்.
உயர்திணை உயிர்கள் மடடுமன்றி அஃறிணை உயிர்களும் இசைக்கு வயமாவதை இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.
காழ்வரை நில்லாக் கடுங்களிற்று
ஒருத்தல் யாழ்வரைத் தாங்கியாங்கு (கலித்தொகை 2)
யானைப்பாகன் குத்துக்கோளுக்கு அடங்காத யானை இசைக்கு மயங்கியமையைக் கலித்தொகை புலப்படுத்துகிறது. குறத்தி பாடிய குறிஞ்சிப்பண்ணைக் கேட்டு பசிமறந்து பயிரை உண்ணாது காட்டு யானை உறங்கியதைப்,
பெருவரை மருங்கில் குறிஞ்சிபாடக்
மறும்புகர் மழகளிறு உறங்கும் (அகம் 102)
என்ற அகநானூற்றுப்பாடல் உணர்த்துகிறது. இசைக்கு அஃறிணை உயிர்களும் மயங்கும் என்பதை இதன்மூலம் அறியலாம். தான்சேன் பாடிய பாடலுக்கு மழைபெய்த்து இசைபாடி உயிர் வளர்த்துள்ளனர் ஆன்றோர்கள்.
படுகிளி கடியும் கொடிச்சிகைக்குளிரே (குறுந்தொகை 291)
திணைகளுக்காக வரும் கிளிகளை விரட்ட சென்ற தலைவி குளிர் என்னும் இசைக்கருவியால் இசைத்து ஒலி எழுப்பினாள். இதனால் அங்கு வந்த கிளிகள் மயங்குகின்றன இதனால் அகிம்சை முறையில் பயிர் காக்கும் தன்மையை உணர முடிகிறது ஆறறிவு உயிர்கள் மட்டுமன்றி அனைத்து உயிர்களின் ஆத்ம தேடலாக இசை அமைகிறது. இசையில் பசியும் மறக்கிறது வலியும் மறக்கிறது மன அமைதியும் கிட்டுகிறது பிரபஞ்சத்தின் சக்தியாக இசை விளங்குவதை அறிய முடிகிறது.
பிரபஞ்ச இசை
பல்வேறு இசைக்கருவிகளின் பெயர்களை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன
ஒத்த குழலின் ஒலிஎழ
முழவு இமிழ் மத்தரி தடாரி
தண்ணுமை மகுளி ஒத்து அளந்து (பரிபாடல் 12-40)
என்பதிலிருந்து மேற்கண்ட இசைக்கருவிகள் பண்டைய தமிழர்களின் தமிழர்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருந்ததை அறிய முடிகிறது. தண்ணுமை முழவம் மொந்தை குனிச்சம் போன்ற தோற்கருவிகளில் ஒசைகளை உண்டாக்கி மக்கள் மகிழ்ந்ததை,
கொட்டியுங் குடைந்து மாடி
ஒண்ணுதல் மகளிர் (குணமாலையார் இலம்பகம் 115)
என சீவகசிந்தாமணி சிறப்பிக்கிறது.
குறிப்புகள்
1. க. வெள்ளை வாரணர், இசைத்தமிழ் ப.14
2. மேலது ப.18
3. ச. ரம்யா சங்க இலக்கியங்களில் இசை. பிரணவ் தமிழியல் ஆய்விதழ் அக்டோபர் 2021,Vol-2 ISSN -1
4. க. வெள்ளை வாரணர் மேலது ப.14
5. மேலது ப.14
6. தமிழிசை கலைக்களஞ்சியம் – முதற் தொகுதி பாரதிதாசன் பல்கலைக்கழம் திருச்சி இரண்டாம் பதிப்பு 2006
7. மேலது ப.22
8. அ. கார்த்திக் சங்க இலக்கியத்தில் இசையும் உயிரினத்தொடர்பும் சன்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழ் மலர் 2 இதழ் 3 ஜனவரி 2015
பயன்பட்ட நூற்கள்
1. வெள்ளை வாரணர் க. இசைத்தமிழ்
இராமகிருட்டிண வித்தியாசாலை நிர்வாகக் குழுவினர்
சிதம்பரம், முதற்பதிப்பு 1979
2. தமிழிசை கலைக்களஞ்சியம் முதற்தொகுதி
பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி, இரண்டாம் பதிப்பு 2006
ஆசிரியர்
முனைவர் கா. சந்தானலெட்சுமி
இணைப்பேராசிரியர், துறைத்தலைவர் – தமிழ்த்துறை
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சாத்தூர்
Leave a Reply