ஆய்வுநோக்கம்
இசைக் கலை மனிதன் தோன்றிய காலம் தொட்டு உள்ளதாகும். இசையை இசைவிப்பது என்றும், இசையைப் பண் என்றும் பழந்தமிழர் குறித்தனர். பண் பண்ணப்படுவதோடு மட்டுமல்லாமல், மனிதனைப் பண்படுத்துவதாகவும் அமைகிறது.
மேலும், இசை இயலுக்கும் நாடகத்திற்கும் அடிப்படையாக அமைந்த காரணத்தினால்தான் முத்தமிழில் இசையை நடுவாக வைத்துப் போற்றினர். இயற்றமிழுக்கு ஓசை மற்றும் சந்தத்தை வழங்குவது அதன் ஊடாக இயங்கும் இசையமைவு எனில் அது மிகையன்று. பழந்தமிழர்கள் இசையில் மிகுந்த நாட்டமும் வளர்ச்சியும் கொண்டிருந்தனர் என்பதற்கு, அழிந்துபட்ட முதுநாரை, முதுகுருகு ஆகிய இசை இலக்கண நூல்களே சான்றாகும்.
இசை என்பதை ‘வாரம்’ என்ற சொல்லாலும் குறிப்பர். அதனால்தான் பிற்றை நாளில் தோன்றிய இறைவழிபாட்டுப் பாடல்களுக்குத் ‘தேவாரம்’ என்ற பெயர் உண்டாயிற்று. தொல்காப்பியர் திணைக்குரிய கருப்பொருட்களைக் குறிப்பிடும்போது பண், யாழ், பறை ஆகியவற்றைத் தனித்தனியே பதிவு செய்கிறார். இதன் மூலம் இசையின் பழமையை அறிய முடியும்.
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் இசைத்தமிழின் ஏழு அடிப்படைகளே பிற்காலத்தில் அனைத்து இசைக்கும் பொதுவாக விளங்கும் ஏழு சுரங்களாயின. ச ரி க ம ப த நி என்பதை நுண்ணிதின் உணர வேண்டும்.
“முதலோடு புணர்ந்த யாழோர் மேன
தவலரும் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே“ (தொல். 1059)
“மறையோர்தே யத்து மண்டல் எட்டனுள்
துணையமை நல்யாழ் துணைமையோர் இயல்பே“ (தொல். 1035)
“அளவிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையோடு சிவணிய
நரம்பின் மறைய என்பனார் புலவர்“ (தொல். 33)
என வரும் நூற்பாக்களின் வழி தொல்காப்பியர் இசை குறித்த செய்திகளைப் பதிவு செய்கிறார்.
இசையின் வரலாறு
ஒரு நாட்டின் நாகரிக வாழ்வினைப் புலப்படுத்தும் இசைக்கலையானது, அந்நாட்டினர் பேசும் தாய்மொழியை நிலைக்களமாகக் கொண்டது. முல்லை நிலத்தில் வழங்கிய இசைக்கு ‘முல்லைத்திணை’ என்றே பெயர்பெற்றது. இத்தொல்தமிழ் இசையை அறிய 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மதுரை மூதூரைத் தேர்தல் வேண்டும்.
அப்பழங்காலத்திலேயே மதுரை மூதூர் சிறந்து விளங்கியது. மாநகரின் எப்பக்கத்திலும் அமைதி நிலவியது. கோலின் செங்குடையும குடையின் தன்மையும் குடிமக்கள் மனத்தைக் குளிரச் செய்தன. இசை செழித்தோங்க ஏற்ற சூழ்நிலை இங்கு நிலவியது.
இம்மாநகருக்குப் புறத்தே ஆயர் இருக்கை அமைந்திருந்தது. அங்கு மாதரி என்பாள் அளித்த சிற்றிலில் கண்ணகி தங்கி இருந்தாள். சிலம்பை விற்றுப் பொருள்கொள்ளச் சென்ற கோவலன் மீண்டிலன். பல தீக்குறிகளை ஆயர் மகளிர்கள் கண்டனர்.
- உரையிட்ட குடப்பால் உறையவில்லை.
- உருகவைத்த வெண்ணெய் உருகவில்லை.
- காளை மாடுகள் கண்ணீர் உகந்து நின்றன.
- பசுக்கள் நடுங்கின.
- அவற்றின் கழுத்தில் கட்டிய மணிகள் தாமே அற்று வீழ்ந்தன.
இவை ஏதோ பெருந்தீங்கு நேர்ந்ததற்கான அறிகுறி என நடுங்கினாள் மாதரி.
முன்னொரு நாள் ஆயர்பாடியில் எருமன்றத்தே கண்ணன் பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தைக் கண்ணகி காணுமாறு ஆடுவதே தீங்கு நேராது காக்க, துயரை நீக்க வழி என அவள் துணிந்தாள். மணமாகா எழுவர் இளமங்கையரை அவள் அழைத்தாள். கூத்துக்கேற்ற பெயரைப் படைத்து அவர்களுக்குப் பெயரிட்டாள். குடமுதல் இடமுறையாக இசை நரம்புகள்ிற்கும் தொன்றுபடும் முறையில் அவர்களை நிறுத்தினாள். அம்மங்கையர் ஆடற்சீர் ஆய்ந்தனர்; பிறகு கூத்துப்பட்டனர்.
அம்மங்கையருள் ஒருத்தி “பாடுதும் முல்லைத் தீம்பாணி“ என்றாள். முல்லைத் தீம்பாணி தொடங்கியது. இங்கு இவர்கள் பாடிய பாட்டும் ஆடிய ஆட்டமும் நாட்டுப் பாடலும் நயம் இலாக் கூத்தும் அல்ல. இவற்றைத் ‘தண்டாக் குரவை’ என்றார் இளங்கோவடிகள். “தண்டாக் குரவைதான் உட்படுவாள்“ என்ற அடிக்கு அடியார்க்குநல்லார் கூறிய உரையை இங்கு கருதுதல் தகும்.
முல்லை நிலத்தில் இசை
இசை தோன்றியது முதன்முதலில் முல்லை நிலத்தில் என்பர் ஆய்வாளர்கள். மொழிக்கு முன்பே தோன்றியது இசை என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. எங்கு மக்கள் பண்பாடும் முதன்முதலில் தோன்றியதோ, அங்குதானே இசையும் தோன்றியிருத்தல் வேண்டும்.
இசையின் தோற்றத்தை ஆராய்ந்த மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களில் குறிப்பிடத்தக்கவர் டாக்டர் சார்லஸ் ப்ரூனி (Dr. Charles Burney) என்பவர். இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் இசைப் பேராசிரியராக இருந்தவர்; இசைக்கலையில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் இயற்றிய நூல் ‘இசைக்கலையின் பொதுவரலாறு‘ எனப் பெயர்பெற்றது. அந்நூலில் அவர் கூறிய குறிப்பை இங்கு காண்போம்:
“உலகம் தொடங்கிய காலத்தில் ஆனிரை மேய்த்தவர்கள் அரசிளங்குமரர்கள் என்றும், அவர்களே நாட்டுப் பாடல்களைச் செம்மை பெறாத இசைக்கருவிகளுடன் இயைந்து பாடி மகிழ்ந்தவர்கள் என்றும் சிறந்த கவிஞர்களும் பழைய பண்பாட்டு ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.”
முல்லை நில மக்களைப் பற்றித் தொல்காப்பியர்:
“ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே“ (தொல். பொருள். 21)
முல்லை நில மக்கள் ஆயர், வேட்டுவர்; அவர்களுக்குள்ளே ஆட்சிக் கிழமை உடையவரும் உளர் எனத் தொல்காப்பியர் சுட்டுவதால், அவர்தம் அரசிளங்குமாரையும் உடன்கொள்ளுதல் பொருந்துவதே ஆகும். இதை ஒட்டியே “ஆயர்களும்…” என்ற பெயர் எழுந்தது போலும். ஆயர்களே முதன்முதலில் இசைக்கருவிகளை இசைத்தனர் என்பதைப் பெரும்பாணாற்றுப்படையில் இருந்து உணரவும் இடம் உண்டு:
“ஓங்குமிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇக் காட்ட
பல்பூ மிடைந்த படலைக் கண்ணி
ஒன்றுஅமர் உடுக்கை கூழ்ஆர் இடையன்
கன்றுஅமர் நிரையோடு கானத்து அல்கி
அம்நுண் அவிர்புகை கமழக்கை முயன்று
ஞேலிகோல் கொண்ட பெருவிறல் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன்றீம் பாலை முனையிற் குமிழின்
புழல்கோட்டுத் தொடுத்த மரல்புரி நரம்பின்
வில்யாழ் இசைக்கும் விரல்எறி குறிஞ்சிப்
பல்கால் பறவை கிளைசெத்து ஓர்க்கும்
புல்ஆர் வியன்புலம் போகி“
(பெரும்பாணாற்றுப்படை: 172-183)
எனக்கூறுகின்றது பெரும்பாணாற்றுப்படை.
இங்கு கானகத்தில் தங்கிய ஆயன், குமிழ மரத்தின் உட்குடுகொண்ட கொம்பை அல்லது கொம்புகளை வில் போல வளைத்து, மரல் நாரை முறுக்கி இசைத்தருமாறு புரிகள் ஆக்கி, அவற்றின் நரம்புகளாகக் கட்டி அமைத்தது வில்யாழ். இவ்ஆயன் உருவாக்கிய வில்லியாழே தமிழ்நாட்டில் முதன்முதலில் தோன்றிய யாழ் என்பர்.
வண்டின் ஒலிகள் யாழின் ஓசைக்கு வழிகாட்டின. யாழின் நரம்புகள் முதன்முதலில் மரல் நார்களால் முறுக்கிய மரல்புரிகளே என்பர். இவற்றின் பின்னர்த் தோன்றியவை விலங்குகளின் நரம்புகள், எஃகுநூல் நரம்புகள் ஆகும். மரல்புரி நரம்பின் மந்த ஒலி வண்டின் ஒலியை ஒத்திருந்தன. யாழின் ஒலிக்குத் தமிழ்ப் புலவர்கள் கண்ட ஒப்புமை உவமையும் பற்பல.
வண்டின் ஓசையைத் தமிழ்ப் புலவர்கள் பலர் பாட்டாக இசைத்துள்ளனர். பிற்காலத்தவர்களில் வண்டின் ஓசையை நுணுகி நுணுகி ஆராய்ந்து இன்பம் கண்டவர் ஞானசம்பந்த பெருமான். இவர் தேவாரங்களில் பற்பல இடங்களில் வண்டினங்கள் பண்பயிலும், பண்பாடும், யாழ் வாசிக்கும். இவற்றில்:
“காமரம், செந்து, செவ்வழி, நேரிசை, பஞ்சரம், மருள் என்னும் பண்ணொலிகள் எழுவதைக் கண்டது கானத்தின் எழுபிறப்பு.”
தேவாரங்களில் இவை எங்கும் குறிப்பிடப்படுகின்றன என்பதைத் தவத்திரு தணிகைமணி செங்கல்வராய பிள்ளை அவர்கள் இயற்றிய ஒலிநெறி கட்டுரையில் காண முடியும்.
சுரும்பு, தும்பி என்பவை இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு இசை தரும் இசையாதென உணரும் வகை இன்றி, பொதுவாக யாழை ஒப்ப வண்டுகளாகப் பாடுவன சுரும்புகளோ? பாட்டின் பொருள் தெரியாதவாறு பாடும் இசையை ஒத்து அரும்பாலை இசை போலும் இசை தரவல்லவை. இந்த இசை தாளமில்லா இசை (ராகம் பாடுவதை ஒக்கும்). தும்பியின் இனமும் பாட்டின் சீரோடு ஏயும் தாளத்தோடு சேர்த்துப் பாடும் பண்ணிசையைத் தரவல்லது. இவற்றோடு மிஞிறு என்னும் வண்டினம் குழல் இசையைப் போல் இசைதரவல்லது எனக் கலித்தொகை குறிப்பிடுகிறது.
“பூஊது வண்டினம் யாழ்கொண்ட கொளைகேண்மின்:
கிளைக்குஉற்ற உழைச் சுரும்பின் கேழ்கெழு பாலைஇசை
விரித்துஆடும் தண் தும்பியினம் காண்மின்: தான்வீழ்பூ
பின்னும், கனைவரல் ஒரு தும்பி காய்சினத்து இயல்காண்மின்“ (பரிபாடல் 11)
“யாழிசை இனவண்டார்ப்ப“ (முல்லைப்பாட்டு – 8)
“வண்டுயாழாக இன்பல் இமிழிசைகேட்டு“ (அகநானூறு 82)
“பல்வண்டு யாழ்செய“ (சிலப்பதிகாரம் 12)
முடிவுரை
உலகம் தோன்றி மக்கள் வாழ்க்கை முதன்முதலில் தோன்றிய காலத்தில், இவ்வாறு வண்டினங்கள் ஒலிக்கவும், மக்கள் துய்க்கவும், யாழிசை தோன்றவும், முல்லையாழ் தோன்றவும் பற்பல வாய்ப்புகளைத் தந்தது முல்லை நிலம். எனவே, ஏனைய நிலங்களை விடப் போதிய அமைதியும் இசைக்கேற்ற இயைபுகள் பலவற்றையும் பெற்றது முல்லை நிலம் ஆகும்.
துணைநூல் பட்டியல்
- பழந்தமிழிசை, கோதண்டபாணி பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், முதல் பதிப்பு – 1959.
- சிலப்பதிகாரம் மூலமும் உரையும், உரை: ந.மு. வேங்கடசாமி நாட்டார், ராமையா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு – 2008.
- சங்க இலக்கியம், வையாபுரிப்பிள்ளை பதிப்பு, பாரி நிலையம், சென்னை.
- தொல்காப்பியம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், முதல் பதிப்பு – 1959.
ஆசிரியர்
முனைவர்கு.சிந்து
தமிழ்த்துறை இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641014
Leave a Reply