தமிழிசையியல் நோக்கில் இராமநாடகக் கீர்த்தனைகள், நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் – ஓர் ஒப்பீட்டாய்வு – தங்கராசா கோபிநாத்

ஆய்வுச்சுருக்கம்     

       தமிழிசையானது சங்ககாலம் முதல் தற்காலம் வரை தமிழ் மக்கள்   வாழ்வியலில் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இயல், இசை, நாடகம் என்ற மூன்றினையும்; தன்னகத்தே கொண்டதனால் முத்தமிழ் என அழைப்பர். பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டு முற்பகுதியிலும் இசைநாடகங்கள் பல இயற்றப்பட்டன. முதன்முதலில் நாடகத்தினை கீர்த்தனை(இராமநாடக கீர்த்தனைகள்) வடிவில் இயற்றியவர் சீர்காழி அருணாசல கவிராயர் ஆவார். அவரைத்தொடர்ந்தே கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திர இசை நாடகத்தை இயற்றினார். இவ்விரு இசைநாடகங்களிலும்  பல இசைவடிவங்களும்  பல   இசையியல்     அம்சங்களும்   காணப்படுகின்றன. மேலும் இவ்விரு இசை நாடகங்களில் காணப்படும் தமிழிசையியலில் கூறுகளில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் காணப்படுகின்றன. ஒப்பீட்டு நோக்கில் இவ் இரு இசைநாடகங்களில் கையாளப்பட்டுள்ள தமிழிசை வடிவங்களையும் தமிழிசை நுட்பங்கனைளயும் மீள்பார்வை செய்தவதன் மூலம் இசை நாடகங்களை பயில்நிலைக்கு கொண்டு வருதல்ஆய்வுநோக்கம்ஆகும். இராமநாடக கீர்த்தனைகளிலும் நந்தனார் சரித்திர கீர்த்தனைகளிலும் காணப்படுகின்ற தமிழிசையியல் சிறப்பம்சங்கள், தனித்துவங்கள்,  ஒற்றுமைகள், வேற்றுமைகள் பற்றிய தெளிவு,புரிதல் மக்கள் மத்தியில் குறைவாக காணப்படுதலும்  இசைநாடகங்கள் பயில்நிலையில் குறைவாக காணப்படுதலும் ஆய்வுப்பிச்சினை ஆகும். ஆய்வு எல்லையாக அருணாசல கவிராயரது இராமநாடக் கீர்த்தனைகளும்,   கோபாலகிருஷ்ண  பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திர கீர்த்தனைகளும் காணப்படுகின்றன. ஆய்வு முறையியல்களாக ஒப்பீட்டாய்வு, விபரண ஆய்வு, வரலாற்றாய்வு என்பன காணப்படுகின்றன. முதனிலை ஆய்வு மூலங்களாக நந்தனார் சரித்திர கீர்த்தனை, இராமநாடக கீர்த்தனை அடங்கிய பதிப்புக்கள்,இவ்விரு இசை நாடகங்களின் ஆற்றுகை காணொளிகள், ஒலிப்பேழைகள் என்பனவும் இரண்டாம் நிலை ஆய்வுமூலங்களாக ஆய்வுக்கட்டுரைகள்,ஆய்வேடுகள் என்பன ஆய்வு மூலகங்களாக காணப்படுகின்றன. ஆய்வுகருதுகோள் தமிழிசை வளர்ச்சி பாரம்பரியத்தில் இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை என்பவற்றின்  பங்களிப்புக்கள் அளப்பரியன என்பதாகும்.

திறவுச்சொற்கள்: இராமநாடகம், நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள்,   கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசல கவிராயர், இசை நாடகங்கள்.

இராமநாடக்கீர்த்தனை, நந்தனார் சரித்திரக்கீர்த்தனை இரண்டிலும் பயன்படுத்தப்பட்ட இராகங்களுக்கு இடையிலான ஒப்பீடு

         கோபாலகிரு~;ண பாரதியார் முறைப்படி பல இசைவகைமைகளைக் கற்று பல இசைவடிவங்களை பயன்படுத்தி நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளில் பலகையான ராகங்களைப்  பயன்படுத்தினார்.  ஆனால் அருணாசல கவிராயர் தனது சிஷ்யர்களான வெங்கடராமன், கோதண்டராமன் இருவரினதும் இசை ஞானத்தை கொண்டும், அவர்கள் இருவரிடம் இசை பயின்றும் இராம நாடக கீர்த்தனைக்களுக்கு இசை அமைத்தார். அந்த வகையில் இராமநாடக் கீர்த்தனைகளில் 43 இராகங்கள் பயன்படுத்தப்பட்டாலும் சில ஆய்வாளர்களது கருத்துப்படி 40 இராகங்கள் பயன்படுத்தப்பட்டன எனக்கூறப்படுகின்றது. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட ராகங்களாக: அசாவேரி, சாவேரி, அடாணா, ஆனந்தபைரவி, உசேனி, யதுகுலகாம்போஜி, கண்டா, கமாசு, கல்யாணி, காபி, காம்போஜி, கேதாரகௌளை, கௌளிப்பந்து, சகானா, சங்கராபணம், சாரங்கா, சுருட்டி, நாட்டைக்குறிஞ்சி, நாதநாமக்கிரியை, நீலாம்பரி, பந்துவராளி, பரசு, பிலகரி, புன்னாகவராளி, பூபாளம், பைரவி, மங்கள கௌசிகம், மத்தியமாவதி, முகாரி, மோகனம், யமுனாகல்யாணி, ஸ்ரீராகம், த்வியாவந்தி என 40 ராகங்கள் பயன்படுத்தப்பட்டதாக தமிழிசை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவற்றில் அசாவேரி, சாவேரி, தோடி, மத்தியமாவதி, மோகனம் ஆகிய ராகங்கள் 15-20 தடவைகள் மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆனந்தபைரவி, சங்கராபரணம், சௌராஷ்டிரம், புன்னவராளி முதலான ராகங்கள் 11-13 தடவைகள் பயன்படுத்தப்பட்டன எனவும் ஏனைய ராகங்கள் 10க்கு குறைவான தடவைகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் த்விஜவாந்தி, மங்களகௌசிகம், சயிந்தவி போன்ற அரிய இராககையாள்கை தற்கால இசைக்கலைஞர்களால் ஓரளவு பின்பற்றினாலும் சிறிதளவு தங்களது இசைஞானத்திற்கு ஏற்ப மாற்றி இசையமைத்து ஆற்றுகை செய்கின்றனர்.        

 நந்தனார் சரித்திரகீர்த்தனைகள் பழையபதிப்பில் 50 இராகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனந்தபைரவி, நாதநாமக்கிரியை, செஞ்சுருட்டி, கல்யாணி, அசாவேரி, மோகனம், நாட்டை, கமாசு, காம்போதி, வராளி,சங்கராபரணம், சாவேரி,அங்குசாவேரி,அடிரூபம், பெஹாக்,மாஞ்சி,புன்னாவராளி, தோடி, எதுகுலகாம்போதி, யமுனாகல்யாணி, சாரங்கா, கௌளிப்பந்து, பூர்வி கல்யாணி, கன்னடபெஹாக், உசேனி, சுருட்டி, சஹானா, சௌராஷ்டிரம், கேதாரகௌளை, மோகனம், ஆரபி, பேகடை, அமிர்கல்யாணி, பைரவி, தேவமனோகரி, சாமா, தேவகாந்தாரி, மாயாமாளவகௌளை, சக்ரவாகம், பூர்ணசந்திரிகா, பலஹம்சா போன்ற ராகங்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் வந்த புதிய பதிப்புக்களில் பல இராகங்கள் மாற்றமடைந்துள்ளன. அத்துடன் தற்கால இளைய இசைத்தலைமுறையினர் தனது இசைப்புலமைக்கு ஏற்ப இராகங்கள் மாற்றங்களை ஏற்படுத்தி பாடி வருகின்றனர்.

நூல் கட்டமைப்பு 

      இராமநாடகத்தில் 268 இசைப்பாடல்களின் தொகுப்பு காணப்படுகின்றது. இதில் காணப்படும் பாடல்கள் அனைத்தும் பல்வேறு சுவைகளில் பல ராகங்களில் பற்பல உணர்வுகளுடன் அமைந்துள்ளன. இங்கு தரு-167(கீர்த்தனை), திபதை-59 (கண்ணி), விருத்தம்-268, கொச்சகம்-06, வெண்பா-02, கலித்துறை இவை தவிர ஒரு தோடயப்பாடல் உரைநடையுடன்காணப்படுகின்றது. விநாயகர்வணக்கம், (ஆரம்பபகுதியாகவும்) இறுதி மங்களமும் பாடப்படுகின்றன. (பெருமாள்.ஏ.என்,1984:590)

      நந்தனார் சரித்திரமானது கதாகாலசேபம் செய்யும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. கோபாலகிரு~;ண பாரதியார் செவ்வவிசை, மராட்டியஇசை, ஹிந்துஸ்தான் இசை, என பல இசைவகைமையில் புலமை கொண்டதனால் இவர் செவ்வியல் இசைவடிவங்கள், நாட்டார் இசைவடிவங்கள், மராட்டிய இசைவடிவங்கள் என இராமநாடகத்தில் காணப்படும் இசைவடிவங்களை விட ஏராளமான இசைவடிவங்களை, இசைவகைகளையும் கொண்டு நந்தனார் சரித்திரத்தை இயற்றியுள்ளார்.

இசைவகைகளும் இசைவடிவங்களும்

   கோபால கிருஷ்ணபாரதியார் பல இசை வகைமைகளையும் இசை வடிவங்களையும் முறைப்படி கற்றமையினால் இங்கு ஏராளமான இசைவடிவங்கள் பயன்படுத்தப்பட்டு நந்தனாரது உணர்வுகள் இலகுவில் மக்களை சென்றடையக் கூடியதாக காணப்பட்டது. அந்த வகையில்

   செவ்வியல் வடிவங்கள்: தோடயம், கீர்த்தனை, பதம், நாமாவளி, இராகமாலிகை, மங்களம்.

  நாட்டார்இசைவடிவங்கள்: சிந்து,லாவணி, நொண்டிச்சிந்து, ஆனந்தக்களிப்பு, லாவணி, கும்மி.

   மராட்டிய நாட்டார் வடிவங்கள்: கட்கா, சவாயி, தண்டகம், பெரியகட்கா, துக்கடா, ஸ்லோகம்.

   தமிழிசைவடிவங்கள் : அகராதி, கண்ணி, ஏசல், இருசொல் அலங்காரம்.                                      

 அதேபோன்று இராமநாடகக் கீர்த்தனையில் பயன்படுத்தப்பட்ட இசை வடிவங்களாக தோடயமங்களம், திபதை, ஓரடிக்கீர்த்தனை, தரு, விருத்தம் என பல செவ்வியல் இசைவடிவங்கள் பயன்படுத்தப்பட்டன. இங்கு 101 தருக்கள் (பாத்திர அறிமுகத்தரு, வர்ணணைத்தரு, வாக்குவாதத்தரு, புலம்பல்தரு, பட்டபாபிஷேகத்தரு) என்பன பயன்படுத்தப்பட்டன. அவை பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்பவற்றை உள்ளடக்கி காணப்படும். அத்துடன் 127 விருத்தங்கள், 20 திபதைகள் (ஈரடிகொண்டவை). இங்கு பாடுகின்ற முறையானது கீர்த்தனைக்குரிய இராகத்தில் முதலில் விருத்தங்களைப் பாடிவிட்டு பின்னர் தருக்களை பாடும் முறை இருந்தது. (சுந்தரம் வீ.ப.கா,:2000:280)

ஒப்பிட்டு பார்க்கின்ற போது இராமநாடக்கீர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்ட இசைவடிவங்களை நந்தனார் சரித்திரத்தில் அதிகமான இசைவடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வேறுபாட்டிற்கு பிரதான காரணம் கோபாலகிருஷ்ண பாரதியாரது பல்வகையான இசைமரபுகளில் காணப்பட்ட புலமையும் ஈடுபாடும் காரணம் ஆகும். அருணாசலகவிராயர் தனது சிஷ்யர்களின் கர்நாடக இசை ஞானத்தை கொண்டு இராமநாடகத்தை செவ்வியல் மரபில் இசையமைத்தார். பின்னர் தனது சிஷ்யர்களுக்கு கம்பராமாயணத்தை கற்று கொடுத்து அவர்கள் மூலம் இசையை கற்று கொண்டார். அதே நேரத்தில் கோபாலகிருஷ்ணபாரதியாரது செவ்வியல் இசைமரபு, நாட்டார் இசைமரபு, தமிழ் இசைமரபு, மராட்டிய இசைமரபு, ஹிந்துஸ்தான் இசைமரபு சார் இசைவடிவங்களை, இசைவகைகளை பயன்படுத்தி பல்வேறு வகையான இரசனை வேறுபாடுகளை உடைய சாதாரணமக்கள் முதல் கற்றவர்கள் வரை அனைவரும் இலகுவில் விளங்கும் வகையில் நந்தனார் சரித்திர கீர்த்தனைகளை வாசகர்கள் மத்தியில் செல்வாக்கும் பிரபல்யமும் பெற்று காணப்படுகின்றது.

தாளங்கள்

    இராமநாடக் கீர்த்தனையில் ரூபகம், ஆதி, திரிபுடைதாளம் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அடதாள சாபுதாளமானது போர் விளக்கத்தரு சொல்லமைப்பில் (சடாயுவிற்கும், இராவணணுக்கும் இடையில் இடம்பெற்ற போரின் போது) உணர்வுபெருக்கத்தின்போது பயன்படுத்தப்பட்டள்ளது. வேகமும், உணர்வும் வல்லின ஒலியும் இரட்டித்து பாடப்படும். பாடல்களுக்கு அடதாளசாபு பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அருணாசலக் கவிராயரது இசை, தாள ஞானம் நன்கு புலப்படுகின்றது.

  உதாரணம்: ராகம்: மத்தியமாவதி ,   தாளம்: அடதாளசாபு

“ கொத்திக்கொத்தி அடித்தானே இடித்தானே சடாயுராஜன் (தமிழர் இசை,பக்-593)

   உதாரணம்:  “ஏன் பள்ளிகொண்டீரய்யா -ஸ்ரீரங்கநாதா”   ராகம்;  மோகனம்,  தாளம்: ஆதி

இங்கு “ஸ்ரீ ரங்கநாதா” எனும் தனிச்சொல் முதலடி ஈற்றில் ஐந்து எழுத்துக்களைக்கொண்டு ஐந்தன் சாய்ப்பு (கண்டசாய்ப்பு) நடையில் அமைக்கப்பட்டிருக்கும். இது அவரது தாளஞானத்திற்கு சிறந்த எடுத்தக்காட்டாகும். இராமநாடகக்கீர்த்தனையில் காணப்பட்ட வாக்குவாதத்தரு, யுத்தத்தரு என்பன நந்தனார் சரிதத்தில் ஒப்பிட்டளவில் (வன்மையான வாக்குவாதம்) குறைவாக காணப்படுகின்றது. இருவரதும் நாடக்கீர்த்தனையிலும் ஆதிதாளம் அதிகமாகப் பயன்படுத்தப்ட்டுள்ளது. மற்றும் நந்தனார் சரிதத்தில் ரூபகம்,சாபு, ஏகதாளம், திரிபுடை, அடதாளம் என்பன கையாளப்பட்டுள்ளன. மிஸ்ரசாபு இங்கு மிஸ்ர ஏகம் என்ற தாளம் சார் சொல் கூடுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

       உதாரணம்:     ராகம்; : சௌரா~;டிரம், தாளம்:  மிஸ்ர ஏகம் – “காணாமலிருக்கலாகாது பாழுங்……………..”

 இசைநாடகங்களுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள்                                                      

      தமிழிசை மரபில் தமிழ் இசை நாடகங்களும் அடங்குகின்றன. இசைநாடகங்கள்  மக்களுக்கு பல ஆரோக்கியமான கருத்துக்களை கூற பயன்படுத்தப்பட்டன. இந்த வகையில் அருணாசல கவிராயர் கம்பராமாயணத்தை இசைப்பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். அத்துடன் பல இசைவடிவங்கள், தருக்கள் மூலம் கம்பராமாயணத்தின் சாரத்தினையும் கொடுத்து பாலகாண்டம்,அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என 06 காண்டங்களை பகுத்து பல்வேறு இசை வடிவங்கள் மூலமும் சிறிதளவு கற்பனையுடனும் இராமநாடக் கீர்த்தனையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதே போன்று     கோபால கிருஷ்ணபாரதியார் பெரிய புராணத்தில் கூறப்பட்ட 63 நாயன்மார் வரலாற்றில் திருநாளைப்போவார் நாயனார் வரலாற்றினை ஆதாரமாகக் கொண்டு சிறிதளவு கற்பனை புனைவுகளை சேர்த்து (வேதியரைப்பற்றிய செய்தியும் நந்தனாரை துன்பறுத்தும் செய்தியும் பெரிய புராணத்தில் இல்லை.) நந்தனார் சரித்திரத்தை இயற்றினார். இவ்விரு இசைநாடகங்களிலும் நூலாசிரியர்களின்  கற்பனைகளை சேர்த்து இரசிகர்களின் இரசனையை அதிகரிக்கும் வகையில் இயற்றியுள்ளமை. இரு இசைநாடகங்களிலும் காணப்படும் ஒற்றுமையாகும்.

  இரு இசை நாடகங்களிலும் இலக்கண செழுமை, வித்துவச்செருக்கு என்பன இல்லாமல் சாதாரண மனிதன் முதல் கற்றவர் வரை இலகுவாக விளங்கும் வகையில் சாதாரணமொழிநடை,  பொருத்தமான பாத்திர வார்ப்பு, சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான இசை வடிவங்களின் பயன்பாடு என்பனவும் நந்தனார் சரித்திரத்தில் பேச்சுவழக்குச்சொற்கள், சேரிமொழிகள், உவமை, பழமொழிகள், நகைச்சுவை பாங்கில் உரையாடல், எதுகை, மோனை அணிக்கையாள்கை என்பன நந்தனார் சரித்திரத்தை மக்கள் மத்தியில் இரசனை, வரவேற்பை பெற்று தந்தன. (வானதி.யோ, 2012:38)

 அதே போல் இராம நாடகம் காலத்தால் முற்பட்டதாக காணப்பட்டாலும் அவற்றிலும் குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்கு எற்ப பொருத்தமான ராகக்கையாள்கை காணப்பட்டமை, யுத்த வர்ணணை சிறப்பாக வர்ணிக்கப்பட்டுள்ளமை, உவமை அணிநயங்கள், சொல்லணிகள், சந்தநயங்கள், இசைநயம், ஓசைநயம், தொடைநயம் என்பன கையாளப்பட்டு மக்களை கவரும் வகையிலம் இரசனையை ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இரு இசை நாடகங்களும் இசை, நயம், மொழிநடை என்பவற்றில் சிறப்புமிக்கவையாக காணப்பட்டுள்ளமை  இரு இசை நாடகங்களுக்கு இடையே காணப்பட்ட ஒற்றுமைகளாகும்.(வானதி.யோ, 2012: 42)

முடிவுரை:            

              தமிழிசை பாரம்பரியத்தில் இசை நாடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது. மக்களுக்கு புராண இதிகாசங்கள், தூய பக்தி கொண்டவரை  இறைவன் ஆட்கொள்வான் போன்ற விடங்களை சாதாரண மக்கள் முதல் கற்றவர்கள் வரை அனைவரும் விளங்கும் வகையில் இசைப்பாடல்களை கொண்டு கதாபாத்திரங்களை பாடுவது போன்று  இசைநாடகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இசை,இயல், நாடகம் போன்ற முத்தமிழும் காணப்படும். இவற்றை இயற்றுவோருக்கு முத்தமிழும் தெரிந்திருக்கும். முற்காலத்தில் வில்லுப்பாட்டு, கதாகாலசேபம் போன்று இசை நாடகங்களும் மக்களுக்கு செய்திகளை அறிவிக்கும் ஊடகமாக பயன்படுத்தப்பட்டது எனலாம். இராமநாடக்கீர்த்தனைகள் காலத்தால் முதலில் இயற்றப்பட்டது. இது அருணாசலகவிராயரது தமிழ் புலமை, கம்பராமாயணத்தில் காணப்பட்ட ஈடுபாடு, இசைஞானம், கற்பனை வளம் என்பவற்றை எடுத்து இயம்புகின்றது. இது நந்தனார் சரித்திர கீர்த்தனைக்கு தோற்றுவாய் எனவும் கூறலாம். கவிராயாரது இராமநாடகக்கீர்த்தனை வைணவ வழிபாடு,வைணவ சம்பிரதாயம் என்பவற்றை எடுத்து இயம்புகின்றது. நந்தனார் சரித்திர கீர்த்தனை மக்களிடையே சமூககட்டமைப்பு பேதங்கள் இருக்க கூடாது, இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கருத்தினை நந்தன் சரிதத்தை வைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் இயற்றப்பட்டுள்ளது. இவ் ஆய்வுக்கட்டுரையை வாசிப்போர் இதனை ஆய்வு முன்னோடியாகக்கொண்டு பல கோணத்தில் ஆராயக்கூடியதாக இருக்கும். இவ்விரு இசை நாடகங்களையும்  இசைப்புலமை கொண்ட இசை விற்பன்னர்களால் இயற்றப்பட்டமையினால் இசை, இசை வடிவங்கள், இசை வகைமைகள்,பாவகைகள், பாத்திரவார்ப்பு  என்பன இசை நாடகங்களின் முதுகெலும்பாக காணப்படுகின்றன எனலாம். அத்துடன் இவை  பல  புதிய நிகழ்த்துக்கலை வடிவங்களாகவும்  பல புதிய இசை நாடகங்களை உருவாக்குவதற்கு தோற்றுவாயாக காணப்படும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

துணை நூற்ப்பட்டியல்

1.அருட்செல்வி.தி, (2018). சீர்காழி தமிழிசை மும்மணிகள் விழாமலர், சேக்கிழார் விழா அறக்கட்டளை, சிதம்பரம்.

2.சுந்தரம் வீ.ப.கா,(2000).தமிழிசைக் களஞ்சியம் (தொகுதி-1), பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.

3.செல்லத்துரை.சே.ச,(2000). தென்னக இசையியல், வைகறைப்பதிப்பகம்,திண்டுக்கல்.

4.பெருமாள்.ஏ.என்,(1984). தமிழர் இசை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

5.மீரா வில்லிவராயர்,(2013). கர்நாடக இசை ஓர் அறிமுகம்,குமரன் புத்தக இல்லம்,கொழும்பு.

6.விஜயலட்சுமி.ச, (2013). இந்திய கர்நாடக இசை, ஸ்ரீ ஸாயி கிரு~;ண கான வித்யாலயா,சென்னை.

ஆய்வுக்கட்டுரைகள்

1.வானதி . யோ, (2012). அருணாசலக்கவிராயரின் இராம நாடக்கீர்த்தனை கோபாலகிரு~;ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக்கீர்த்தனை ஆகிய இசை நாடகங்களிற்கிடையேயான ஒப்பீடு,இசைத்துறை,சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை.

2.கோபிநாத்.த,(2018). நவீன தமிழ் இசை உலகில் அருணாசலகவிராயரின் பங்களிப்பு, பாத்திமா கல்லூரி, தமிழ் உராய்வு மையம், மதுரை.

ஆசிரியர்

தங்கராசா கோபிநாத்,

விரிவுரையாளர்,கர்நாடக இசைத்துறை,

சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்,

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.kopinatht@esn.ac.lk

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*