தேவாரத்தில் பண்களும் கட்டளைகளும் – முனைவர் அ.ஆத்தீஸ்வரி

நோக்கம்

தேவாரக் காலங்களில் இசைத்தமிழ் இறையோடு கலந்து வளரலாயின. தேவாரப் பாடல்கள் அனைத்தும் பண் சுமந்த இனிய இசைப் பாடல்கள். தேவார முதல்வர் மூவருமே தமிழையும் இசையையும் இணைத்துப் பாடினர். எனவே தமிழ் இசை அமைப்பு தமிழ் பண்கள் ஆகியவற்றைக் கைக்கொண்டனர். சங்க காலத்தில் தமிழிசை அமைப்பாக இருந்த ஏழிசை, தமிழ்ப் பண்கள் இவற்றைக் கொண்டு இறையுணர்வுப் பாடல்களைப் படைத்தனர் என்பதை இக் கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பண்களும் கட்டளைகளும்

பண் என்பது ‘இனிமையான இசைத் தொடர்புடைய ஒளி உருவமைப்பு’ ஆகும். பாக்களோடு இயைத்துரைக்கப்பட்ட இசையினை நெஞ்சு, மிடறு, நா, மூக்கு, அண்ணம் ,உதடு, பல், தலை என்னும் எட்டு  இடங்களிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண்வகைத் தொழில்களால் சீர் பெறப்  பண்ணிப் பாடப் பெறுவது எனக் குறிப்பிடப்படுகிறது என்பதைப்,

“பாலோ டணை இசையென்றார்  பண்ணென்றார்

மேலோர் பெருந்தாளம் எட்டானும் –  பாவாய்

எடுத்தல் முதலா இருநான்கும் பண்ணிப்

படுத்தமையார் பண்ணென்று பார்”  1

என இப்பாடல் விளக்குகிறது. எனவே பண்ணுதல் என்னும் வினையடியாகப் பிறந்தது பண் எனப்பட்டது.

ஒவ்வொரு பண்ணிலும் அமைந்த யாப்பு வகையினைக் கட்டளைகள் என்ற சொல் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு பண்ணிலும் அமைந்த பதிகங்களின் மாத்திரை அளவும், எழுத்தியல் நிலையும் பற்றிச் செய்யுள்களில் அமைந்த ஓசைக் கூறுபாடு கட்டளையாகும். இக்கட்டளை அமைப்பினை அடியொற்றியே இசைப் பாக்களின் தாளம் முதலிய பண் நீர்மை அமையும். தேவாரப் பதிகங்களுக்கு உரிய  யாப்பமைதியினையும், மாத்திரை அளவினையும் கருத்தில் கொண்டு தான தானதன தனா முதலியவற்றை வாய்பாடுகளாக அமைத்து எழுத்து எண்ணி அடிவகுக்கும் முகமாக அவற்றின் கட்டளைகளைப்  பிரித்து அறியலாம்.2  எனவே தேவாரப் பண்கள் சில கட்டளைகளுக்கு உட்பட்டு வகுக்கப்பட்டுள்ளன.

தேவாரப் பண்கள்

 தேவாரத்தில் இருபத்திமூன்று  பண்கள் சுட்டப்படுகின்றன. அவை ‘செவ்வழி’, ‘தக்கராகம்’, ‘நேத்திரம்’, ‘பஞ்சமம்’, ‘காந்தாரம்’, ‘நட்டபாடை’, ‘அந்தாளக்குறிஞ்சி’, ‘பழம்பஞ்சரம்’, ‘மேகராகக் குறிஞ்சி’, ‘கொல்லிக் கௌவானம்’, ‘பழந்தக்கராகம்’, ‘குறிஞ்சி’, ‘நட்டராகம்’, ‘வியாழக் குறிஞ்சி’, ‘செந்திரம்’, ‘தக்கேசி’, ‘கொல்லி’, ‘இந்தளம்’, ‘காந்தாரப்பஞ்சமம்’, ‘கௌசிகம்’, ‘பியந்தை’, ‘சீகாமரம்’, ‘சதாரி’, என்பவை ஆகும். இப்பண்கள் மூவராலே பாடப்பெற்ற சிறப்பினை உடையனவாய், இசை நிலம் கெழுமியப் பனுவல்களாகத் தேவாரத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்தளம்

பெருமிதம், மருட்கை, வெகுளி என்னும் சுவைகளை உடையதாய் அமைந்த இந்தளப்பண் இளவேனில் காலத்துக்கு ஏற்றதாகத் தேவாரம் சுட்டுகிறது.

“செய்யர்வெண் ணூலர் கருமான் மறிதுள்ளும்” 3      

என்று வெண்டளை பிழையாது பன்னிரெண்டு எழுத்துக்களாவன நாற்சீர் அடியாக வருவது இந்தள யாப்பாகும் மேலும் எழுத்து அளவும் வெண்டளையும் பிழையாது நிற்க, மாச்சீர் விளச்சீர், காய்ச்சீர் விரவி வருதல் இவ் யாப்பின் அமைப்பாகக் காணப்படுகிறது.

சீகாமரம்

வெண்பாக்களில் பயிலுதற்குரிய மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர் ஆகிய சீர்களைப் பெற்று வெண்டளைத் தழுவி நடக்கும் கொச்சகக் கலிப்பா யாப்பில் அமைந்திருப்பது சீகாமரப்பண் ஆகும்.

“சூலப் படையானைச் சுழாக வீழருவிக்

கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப்

பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய

ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே” 4

பழந்தக்கராகம்

காய்ச்சீர் நான்கு கொண்ட அடிகளால் ஆகிய தரவு கொச்சகமாக அமைந்து வருவது பழந்தக்கராகம் ஆகும். இப்பண் இனிய இசை நலம் தழுவியதாக உள்ளது.

சொன்மாலை பயில்கின்ற

குயிலினங்காள் சொல்லீரே

பன்மாலை வரிவண்டு

பண்மிழற்றும் பழனத்தான் 5

காந்தாரப்பஞ்சமம்

விளம், விளம், மா விளம்,என நாற்ச் சீரடிகளால் அமைந்து வருவது காந்தார பஞ்சமப் பண் எனப்படுகிறது.

முளைக்கதிர்  இளம்பிறை மூழ்க வெள்ளநீர்

வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்  6

           சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழ 7

என இப்பண் தேவாரத்தில் எடுத்தாளப் பெற்றுள்ளது.

சாதாரி

பழந்தமிழ்ப்பாக்களில் பாட்டின் சிறப்புப் பொருள் தரும் சொற்றொடர் ஈற்றிலே வருவதைப் போல, அத்தகைய தொடர் மொழியினைப் பாடலின் முதலிலே நிற்க வைத்துப் பாடும் முறையே  சாதாரி என்ற பண்ணிற்கு அமைந்த கட்டளையாகும் எனத் தேவாரம் சுட்டுகிறது.

“தலையே நீ வணங்காய்—தலை

மாலை தலைக்கணிந்து

தலையாலே பலி தேருந் தலைவனைத்

தலையே நீவணங்காய்” 8

கொல்லி

இப்பண் தேவாரத்தில் சிறப்பாகக் கையாளப்படுகிறது “இது மருதப் பெரும் பண்ணின் புறநிலையாய்ப் பண் வரிசையில் 70 என்னும் எண்  பெற்றது. இப்பண்ணை இக்காலத்தவர் நவரோசு என்னும் இராகத்தில் பாடி வருகின்றனர்” 9

“கூற்றாயின வாறு விலக்ககிலீர்

கொடுமைபல செய்தன நான்அறியேன்

ஏற்றதாய்அடிக் கேஇர வும்பகலும்

பிரியாது வணங்குவன் எப்போதும்” 1 0  

என இப்பண்ணுக்குரிய இப்பதிகம் ஒரே யாப்பினவாய் ஒரே கட்டளையில் உள்ளது. இவ்வாறு அறுசீர் அடியால் வருவது இப்பண்ணுக்குரிய கட்டளை அமைப்பாகும்.

இவற்றைத் தவிர தேவாரத்தில் எடுத்தாளப் பெற்ற பண்கள் அனைத்துமே இறையருளை மக்கள் உணர்ந்து அவ்விறைவனை இசையால் பாடி வாழ்த்தும் முறையில் சீர்மையாக அமைக்கப்பட்டுள்ளன.

நிறைவுரை

 இலக்கியத்தின் சிறப்பிற்குக் காரணமாய் இலக்கியங்களின் வடிவமும் பாடுபொருளும் அமைகின்றன. இவ்வகைத் தெய்வத்தமிழ் பாடல்களாகிய தேவாரத்தில் மூவர் முதலிகள் பல்வேறு உத்திகளையும் மொழி நடைகளையும் சங்க இலக்கிய மரவிற்கு ஏற்ப கையாண்டுள்ளனர். யாப்பு அமைதி தழுவிய பாடல்கள் ஒலிநயத்தோடு தொடர்பு பெற்று ஒலிநய வகை அமைப்பினைப் பிரதிபலிக்கின்றன.  இலக்கிய அமைப்பிற்கு ஏற்ப பல வகையான மொழி மரபுகள் தேவாரத்தில் இடம்பெற்றுள்ளன.

குறிப்புகள்

  1. க. வெள்ளைவாரணன், இசைத்தமிழ், ப -22
  2. கு. சுந்தரமூர்த்தி, சுந்தரர் வரலாற்றாராய்ச்சியும் தேவாரத்திறனாய்வும் ப – 116
  3. நாவு    : 4 : 16 : 1
  4. மேலது : 4 : 19 : 1
  5. மேலது : 4 : 12 : 1
  6. மேலது : 4 : 10 : 1
  7. மேலது : 4 : 11 : 1
  8. மேலது : 4 : 9  : 1
  9. க. வெள்ளைவாரணன், பன்னிரு திருமுறை வரலாறு (முதற்பகுதி), ப – 612
  10. நாவு    : 4 : 1  : 1

முனைவர் அ.ஆத்தீஸ்வரி,  இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை,  மதுரைக் கல்லூரி (தன்னாட்சி),மதுரை                                             

 Save as PDF

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*