முந்து தமிழ் நூலாகிய தொல்காப்பியம் இயல் தமிழுக்கான இலக்கணத்தைப் பறக்க விரித்துரைத்துள்ளது. இலக்கணக் கூறுகளில் பல, இசைக்கான இலக்கணங்களின் அடிப்படையாகவும் இருப்பதை ஆராய்ச்சி வழி கண்டறிய முடிகிறது. இசை என்பது எழுத்தாலும் சொல்லாலும் பொருளாலும் சுரக்கோர்வைகளாலும் அமைக்கப்படும் ஒரு கூறாகும். அப்படிப்பட்ட இசையில் பா அமைப்பின் அடிப்படையில் பல நுட்பங்களைத் தமிழ் இயலுக்கான இலக்கண கூறுகளில் இருந்து கண்டறிய முடிகிறது. அதைப் போலவே இசை அமைப்புகளில் சில கூறுகளைச் சொல்லுக்கான இலக்கணங்களில் இருந்து உய்த்துணர முடிகின்றது. அவ்வாறான ஓர் இசை கூறாக இசை விரிவாக்கம் என்னும் இசை நீட்டத்தைக் குறிப்பிடலாம்.
புதியதொன்று பிறப்பதும் அதில் அடுத்தகட்ட வளர்ச்சிநிலை ஏற்படுவதும் புவியில் நிலையானதாகும். இசை என்பது உருவாக ஓசை காரணமாக அமைந்தது. அவ்வழியில் அடுத்தகட்ட வளர்ச்சியாக எழுத்துக்களின் ஒலிக்கும் அளவுகள் அமைந்துள்ளன. சீருடன் ஒலித்தல் சவுண்ட் (Sound) எனப்படும். வரையறையற்ற ஒளி நாய்ஸ் (Noise) எனப்படும். பண்படுத்தப்பட்ட நுண்ணொலிகளுக்குக் (Fine sounds) காலக்கட்டுப்பாடு அவசியம். ஒலிகளுக்கான அக்கால கட்டுப்பாட்டின் இரு நிலைகளாக இசை குறுக்கமும் இசை நீட்டமும் அமைந்துள்ளன. இவற்றில் இசை நீட்டம் பற்றியும் அது பிற்காலத்தில் இசை விரிவாக்கம் என்னும் இசை அழகணிக்கு அடிப்படையாக அமைந்தமாற்றை இக்கட்டுரை எடுத்து விளக்குகின்றது.
உலகில் இயங்கும் எல்லா பொருட்களும் ஏதோ ஒரு காலக்கணக்கோடு இயங்குகின்றன. கடலலை, காற்றின் மொழி, அருவி நீரோட்டம், ஆற்று நீரின் வேகம், மரங்களின் அசைவு என்று இயற்கையுடன் விலங்கினங்களின் ஒலி, பறவைகளின் ஒலி அனைத்திலும் காலக்கணக்கு உள்ளது. காலக்கணக்கை விடுத்து எதுவும் இயங்க முடியாது. எனவேதான் எழுத்துக்களை உச்சரிக்கவும் கால அளவு வேண்டும் என்று இலக்கண நூல் ஆசிரியர்கள் கருதி இருக்கின்றனர். ஒவ்வோர் எழுத்தும் எத்தனை கால அளவைப் பெற்றிருக்க வேண்டும் என்னும் கால கணக்கு வரையறை செய்யப் பட்டுள்ளது. எழுத்துக்களின் கூட்டமைப்பில் உருவாகும் நாதமாகிய இசைக்கும் காலம் இன்றியமை யாதது. அதனையே தாளம் என்று குறிப்பிடுகின்றோம். எழுத்துக்களின் காலத்தைக் கணக்கிட்டு அவை குறுகி ஒலிக்க வேண்டும் அல்லது நீட்டி அளபெடுத்து ஒலிக்க வேண்டும் என்பதைத் தொல்காப்பியம் தெளிவாகக் கணக்கிட்டுள்ளது. இசையின் இரு கண்கள் சுருதியும் தாளமும் ஆகும். இவற்றின் முக்கியத்துவம் கருதியே “சுருதி மாதா லய பிதஹ” என்று இசை சான்றோர் குறிப்பிடுவர். இசைக்குச் சுருதியும் தாளமும் இரு கண்களாகக் கருதப்படுகின்றன. எனவே எழுத்துக்களின் காலத்தைக் கொண்டு இசைப் பாடல்களின் காலத்தைக் கணக்கிட வேண்டியது அவசியமாகிவிட்டது.
குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவும் நெடில் எழுத்துக்கள் இரு மாத்திரை அளவிலும் ஒலிக்கின்றன. இசை பாடல் என்பது ஒன்று அல்லது இரண்டு மாத்திரையோடு நீண்டு ஒலிக்கும் தன்மை உடையன. ஆதலால் அதனை நீட்டி ஒலிக்கும் பொழுது அதற்கென மாத்திரை ஒலியும் அதிகமாக இருக்க வேண்டும்.
எழுத்துக்களுக்கான மாத்திரைகளைத் தொல்காப்பியர் பின்வருமாறு அளவிடுகிறார்.
அவற்றுள்
அ இ உ
எ ஒ என்னும்
அப்பால் ஐந்தும்
ஓரளபு இசைக்குங் குற்றெழுத் தென்ப – தொல்.எழுத்து.நூன்.நூ.3.
அ இ உ எ ஒ என்னும் ஐந்து குற்றெழுத்துக்களும் ஒரு மாத்திரை அளவுடையன.
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத் தென்ப – தொல்.எழுத்து.நூன்.நூ.4.
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழு எழுத்துக்களும் இரண்டு மாத்திரை அளவுடையன.
மூவளபு இசைத்தல் ஓரெழுத் தின்றே – தொல்.எழுத்து.நூன்.நூ.5.
எந்த ஓர் எழுத்தும் மூன்று மாத்திரை அளவில் ஒலிக்காது. அவ்வாறு மூன்று அளவாக ஒலிக்க வேண்டும் என்றால் அதனை நீட்டிக்கொள்ளலாம். எவ்வாறெனில் எந்த எழுத்தை நீட்டித்து ஒலிக்க வேண்ட்டுமோ அவ்வெழுத்தின் குற்றெழுத்துக்களை ஒலித்து நீட்டித்துக் கொள்ளலாம்.
நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் – தொல்.எழுத்து.நூன்.நூ.6
என்பார் தொல்காப்பியர். அ என்னும் எழுத்தை நீட்டித்து ஒலிக்க அதனோடு சில மாத்திரைகளைச் சேர்த்து ஒலித்து இயல் பாடங்களில் பயன்படுத்துவதைப் போல இசையை நீட்டித்து பாடவும் இந்த முறை பயன்படுகிறது. இரு மாத்திரையுடைய நெடிலை நீட்டிக்க வேண்டுமெனில் அதனோடு அ என்னும் குறிலையும் இணைத்து ஒலிக்க வேண்டும்.
ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஐஇ ஓஒ
என்றவாறு ஒலித்தல் அமையும். பொருளை விற்கும் பொழுதும் தூரத்தில் இருப்பவரை அழைக்கும் பொழுதும் இவ்வாறு நீட்டித்து ஒலித்தல் அவசியமாகின்றதை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டுகளின் வழி எடுத்துரைக்கின்றனர்.
கொட்டிக்கிழங்கோஒ கிழங்கு
இப்படி ஒரு பொருளை விற்கும் பொழுதும்
கண்ணா அ வாஅ
என்று தொலைவில் உள்ள ஒருவரை அழைக்கும் போதும் அளபெடுத்து உச்சரிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இக்கூற்றை க்குர்ந்து நோக்கினால் இன்றைக்கும் இம்முறை அழிந்துபடாமல் வழக்கில் இருப்பதை நடமுறை வாழ்க்கையில் பயன்படுவதை அறியலாம்.
ராலு உ மீனோஒ
கீரஅ கீரஅ
என்று அன்றாடம் வணிகப்பொருட்காள் விற்கப்படுவதைக் காணலாம்.
இவாறக அளபெடுத்து ஒலித்தல் எங்கெல்லாம் நிகழும் என்பதை
ஆவியும் ஒற்றும் அளவுஇறந்து இசைத்தலும்
மேவும் இசைவிளி பண்டமாற்று ஆதியின் – நன்னூல்.எழுத்து.எழுத்.நூ.101.
என்னும் நூற்பா வழி நன்னூலார் எடுத்துரைக்கின்றார். பாடல், அழைத்தல், பண்டமாற்று முதலிய இடங்களில் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் முன் சூத்திரத்தில் கூறிய அளவைவிட அதிகமாக ஒலிக்கும். முறையிடுதல், புலம்பூதல் ஆகிய இடங்களிலும் எழுத்துக்கள் தம் மாத்திரையினின்று நீண்டு ஒலிக்கும்.
கட்டுரை ஆசிரியர் சிறுவயதில் தன் தந்தையாரிடத்தில் இசை கற்கும் பொழுது, வர்ணத்தில் இசைநீட்டம் அதாவது கார்வை வரும்பொழுது எல்லாம் உயிர் ஒலிக்கு ஏற்ப அ அல்லது இ அல்லது உ அல்லது ஏ என்று உயிர் ஒலிகளைத் துணை எழுத்தாக எழுதி பாடம் கற்பிப்பார். ‘அன்னமே அரவாபரணனை அழைத்து வா’ என்னும் ஆரபி இராக வர்ணத்தில் அரவாபரணனை என்ற இடத்தில்
பா மா பா; மமப மா ம க ரி I ரிரி மக ரிரி சச I சநித ரீ சரிம I I
அன்ன. மே. அஅஅ ரஅஅஅஅ I வா அஅ பஅஅஅ I ராஅஅ ணஅ னைஇஇI I
பமப மகரி தபதப மப ச்நிதத I ரிச் ரி சநிதத I பாமக ரிசரிம I I
அஅஅ ழைஐஐத்துஉஉஉஉ வாஅஅ I வேஎஎ கஅஅஅ I மாஅஅ கஅஅஅ I I
என்று உயிர் எழுத்துக்களைச் சேர்த்து எழுதி பாடத்தைச் சொல்லிக்கொடுப்பார். பாட்டு நோட்டில் மேற்கண்ட வகையில்தான் எழுதுவார். தொடக்கக் காலப் பயிற்சியில் உள்ள இளம் மாணவர்கள் எத்தனை மாத்திரையை நீட்டித்துப் பாட வேண்டும் என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள இம்முறை சிறப்பானதாகும். இங்கே தொல்காப்பியர் சொன்ன நீட்டம் வேண்டும் அந்த அளவுடைய எழுத்துக்களை மீண்டும் மீண்டும் உச்சரித்து இசை விரிவாக்கம் செய்து கொள்ளலாம் என்னும் அந்த அடிப்படையான தன்மையைத்தான் பிற்காலத்தில் இசை விரிவாக்கம் என்னும் ஓர் இசை அழகு அணியாகக் கலைஞர்கள் மேம்படுத்தி இருக்கின்றனர்
தொல்காப்பிய மரபுகள் நீட்சி பெற்று வேறு வேறு மாற்றங்களை உடைய புதிய வடிவங்களைத் தோற்றுவித்துள்ளன. அவ்வகையில் இசை பாடலுக்கே உரித்தான இசை விரிவாக்கம் என்னும் அழகணி தொல்காப்பியத்தின் இலக்கணத்தை அடியொற்றி அமைந்திருப்பதை அறிய முடிகின்றது. இசை விரிவாக்கம் என்பது வந்தது வளர்த்தல், சங்கதி பாடுதல், விருத்தி, விரிவாக்கம் பாடுதல் என்றெல்லாம் பலவாறு அழைக்கப்படுகின்றது. இசை விரிவாக்கம் என்பது பாடுகின்ற சுர அமைப்பைத் தாளத்திற்குள் அமைந்திருக்குமாறும் சுரக்கோர்வைகளை மாற்றி மாற்றி பாடுதலும் ஆகும்.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சீருடன் உருட்டல் என்பது இவ்வாறான இசை விரிவாக்கத்தையே என்று கருதலாம்.
மரகத மணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல் விரல்கள்
பயிர் வண்டின் கிளைப் போலப் பல்நரம்பின் யிசைப் படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏறுடை பட்டடையென இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கரணத்துப்
பட்டவகை தன் செவியினோர்த்து – சிலப். கானல். 7:10 -15
எனச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ள எட்டு வகையான இசைக்கரணங்களுள் ஒன்று சீருடன் உருட்டல் என்பதாகும். தாளக்கட்டிற்குள் சுரக்கோர்வைகளில் வேறுபாடு காட்டி இயலை விரித்துப் பாடுதலே இசை விரிவாக்கம் எனப்படும்.
பிற்காலத்தில் இசை விரிவாக்கத்திற்கு மிகவும் முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. எளிமையான கீர்த்தனைகளில் இசை விரிவாக்கத்தை அமைத்துப் பாடும் போது அது அப்பாடலுக்கு இராகத்தின் சிறப்பை எடுத்தியம்பும் சிறப்புக்கூறாக அமைகின்றது. காலத்தின் தேவைக்கேற்ப இசைவிரிவாக்கத்தை அமைத்துப் பாடும் மரபு பின்பற்றப்பட்டு, அது பாடலுக்கான இசை அழகணியாக நிலைபெற்று விட்டது.
பாடலைத் தொடங்கும் போது எளிமையாகத் தொடங்கிப் பின்னர் கலைஞர்கள் தங்களின் மனவளத்திற்கு ஏற்றவாறும் கற்பனைத் திறனுக்கு உகந்தும் சுரக்கோர்வைகளில் பல மாற்றங்களைக் கொண்டு கமகங்களினால் அழகூட்டிப் பாடுவதே இசை விரிவாக்கம் எனப்படும். சங்கதி என்னும் இந்த இசை விரிவாக்கத்தை அமைத்துப் பாடுவதற்கு ஏற்ற வகையில் நெடில் எழுத்துக்களும் இனிய ஓசை நயத்தையும் உடைய குறில் எழுத்துக்களும் பாடலில் இடம்பெற்று இருந்தால் இசை விரிவாக்கம் சிறப்புற அமையும் பாடலில் எழுத்துக்கள் குறைவாக இருந்தால் இசை விரிவாக்கம் செய்ய ஏற்றதாக இருக்கும்.
இசை விரிவாக்கத்தின் பயன் யாதெனின் கருத்துக்களின் ஆழத்தையும் நுட்பத்தையும் மனத்துள் ஆழமாகப் பதிய வைத்தலே ஆகும். இதுதான் முதன்மையான காரணம். பாடும் பண்களின் நுட்ப அழகுகளை எல்லாம் எடுத்துரைக்கவும் இசை விரிவாக்கம் உதவுகின்றது. இவற்றோடு பாடும் கலைஞரின் தனித்த ஆற்றலையும் தாளக்கட்டையும் கற்பனை வளத்தையும் நன்கு வெளிப்படுத்த இசை விரிவாக்கம் செய்யும்போது நல்ல வாய்ப்பு ஏற்படும்.
இசை விரிவாக்கம் எடுப்பு தொடுப்பு முடிப்பு என்னும் இசை பாடலின் அங்கங்கள் ஆகிய பல்லவி அணு பல்லவி சரணம் ஆகிய மூன்று இடங்களிலும் பாடப்படுகின்றன. அதைப் போலவே பாடல் அடிகள் தொடங்கும் போது பாடலின் நடுவில் பாடலின் முடிவில் என்று இசை விரிவாக்கம் செய்யும் இடங்களும் பலவாராக உள்ளன.
பாடலின் தொடக்கத்தில் இசை விரிவாக்கம் செய்து பாடுவதற்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நித்யானந்தத்தை நாடு என்னும் காப்பி இராக ஆதித்தாள கீர்த்தனையைக் குறிப்பிடலாம். இதே பாடலின் இறுதியில் திசை விரிவாக்கம் செய்து பாடப்படுகின்றது. இதே பாடல் இறுதியில் இசை விரிவாக்கம் செய்து பாடுவதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மாரமணன் என்னும் கீர்த்தனை பாடல் முழுவதும் இசை விரிவாக்கம் செய்து பாடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இவ்வாறாக இசை விரிவாக்கம் என்பது பாடலின் தொடக்கத்தில் இடையில் இறுதியில் என்று வெவ்வேறு நிலையில் செய்து பாடப்படுகின்றது
இசை விரிவாக்கம் கேட்போர் மனத்தில் பதியும் வண்ணம் அமைய வேண்டும் கேட்போரின் கருத்தையும் கவனத்தையும் கவரும் வண்ணம் அமைந்தால் தான் பாடுவதற்கான முழு பயனும் கிட்டும் இசை விரிவாக்கம் செய்யும்பொழுது பதச்சேதம் இல்லாமல் மிகத் தெளிவாகச் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
ஒவ்வோர் இசைவிரிவாக்கத்தையும் இருமுறையேனும் பாடவேண்டும். எவ்வளவு முயற்சி எடுத்தாலும் இனிமையான குரல்வளம் இருந்தால்தான் இசை விரிவாக்கம் இனிமை பயக்கும். தமிழ்க்கீர்த்தனைகளை இசைவிரிவாக்கம் செய்து பாட முடியாது என்ற கருத்து சிலரிடம் நிலவுகின்றது. அவர்கள் தெலுங்கு கீர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தமிழறிந்த மக்களிடம் தமிழ்க் கீர்த்தனைகளை இசை விரிவாக்கம் செய்து பாடும் போது பதச்சேதம் ஏற்பட்டால் அவர்களால் அதைக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் தெலுங்கு அறியாத தமிழ் மக்களிடம் தெலுங்கில் பாடினால் இராக விரிவாக்கத்தை மேம்படுத்தி சிறந்த பாடகர் என்னும் பெயரைப் பெற்று விடலாம்.
நிறைவாகத் தொல்காப்பியம் தமிழரின் இயற்றமிழுக்கான முந்து இலக்கண நூலாக மட்டும் இல்லாமல் இசைக்கும் இலக்கணம் வகுத்த நூலாக இருப்பதை அறிய முடிகின்றது. இசைக்கு முதன்மையானது எழுத்து. அந்த எழுத்துக்குரிய இலக்கணம் இயலுக்கானதாக மட்டும் இல்லாமல் இசைக்குரியதாகும் பொருந்தி வருவது என்பது தொல்காப்பியத்தின் மிகப்பெரிய அடிப்படைக் கூறாக உள்ளதை அறிய முடிகின்றது. தமிழன் தன்னுடைய செம்மாந்த புலமையை எல்லாவற்றிலும் பதிய வைத்துள்ளமையை இதன் வழி அறிய முடிகின்றது. இசை நீட்டம் என்கின்ற இசை விரிவாக்கத்தைப் போலவே பல்வேறு இசை கூறுகளுக்கான இலக்கண அடிப்படைகள் தொல்காப்பியத்தி இடம்பெற்றுள்ளதை அந்நூலை தெளிவாக ஆராயும் போது புலப்படுகின்றது. எனவே தொல்காப்பியம் இயலுக்கான நூலாக மட்டுமின்றி இசைக்கான இலக்கணத்திற்கும் பொருந்தி வருமாற்றை இவ்வாராய்ச்சி கட்டுரைகளின் வழி அறிய முடிகின்றது.
முனைவர் இராச. கலைவாணி
இயக்குனர், ஏழிசை இசை ஆய்வகம்
மயிலாடுதுறை – 609 305
Leave a Reply